தினகரன் -- சென்னை

மக்கள் பணியில் சுணக்கம் ; கமிஷன் மட்டுமே குறிக்கோள் லஞ்சத்தில் திளைக்கும் பம்மல் நகராட்சி ஆணையர்: முதல்வர் தனிப்பிரிவில் திமுக புகார்
23-2-2018 1:24

பல்லாவரம்: மக்கள் பணியில் சுணக்கமாக செயல்பட்டு, கமிஷன் மட்டுமே குறிக்கோளாக கொண்டு லஞ்சத்தில் திளைக்கும் பம்மல் நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் தனிப்பிரிவில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பம்மல் நகர திமுக செயலாளரும், முன்னாள் நகரமன்ற தலைவருமான வே.கருணாநிதி சார்பில் முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் நகராட்சியின் நிர்வாக இயக்குனருக்கு, பம்மல் நகராட்சியில் நடைபெறும் ஊழல் மற்றும் ஆணையாளரின் முறைகேடு குறித்து ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:பம்மல் நகராட்சியில் மின்மோட்டார் மற்றும் தண்ணீர் தேக்கி வைக்கும் சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவை பல நாட்களாக சேதமடைந்து கிடக்கிறது. இதனால் 15 நாட்களுக்கு ஒரு முறை என நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் நகராட்சி ஆணையர் சந்திராவிடம் முறையிட்டால், ‘‘இதையெல்லாம் நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டியது தானே. நானா வந்து சரி செய்து தர முடியும்’’ என்று அலட்சியமாக பதில் அளிக்கிறார்.ஆனால், தனிநபர் வீடு மற்றும் அலுவலகம் கட்டுவதற்குத் தேவையான பிளான் அப்ரூவல் வழங்குவதில் மட்டும் லஞ்சம் பெற்று கொண்டு பணியை விரைந்து முடிக்க ஆர்வம் காட்டுகிறார். கொசு மருந்து ஒழிப்புப் பணியில் ஈடுபடும் தற்காலிக பணியாளரின் ஊதியத்திலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறார். மக்கள் பணியாற்ற வேண்டிய நகராட்சி ஆணையர் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலகத்திற்கே வருவது கிடையாது. இதனால் தங்களது குறைகளை தெரிவிக்க நகராட்சி அலுவலகம் வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடனேயே திரும்பிச் செல்லும் நிலையே உள்ளது. ஆனால் மாலை 5 மணிக்கு மேல் நகராட்சி அலுவலகம் வரும் ஆணையர் சந்திரா நள்ளிரவு 12 மணி வரை தனியார் ஒப்பந்ததாரரிடம் தனக்கு வர வேண்டிய லஞ்சம் குறித்தும், கமிஷன் குறித்தும் மணிக்கணக்கில் பேசி வருகிறார். எனவே, தொடர்ந்து அரசுப் பணியில் மெத்தனப் போக்கை கடைபிடித்து பொதுமக்களின் நலனில் சிறிதளவும் அக்கறையின்றி செயல்படுவதுடன், லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும் பம்மல் நகராட்சி ஆணையாளர் சந்திரா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிராக சதி: பாகிஸ்தான் தூதரக அதிகாரி உட்பட 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
23-2-2018 1:22

பூந்தமல்லி: இந்திய இறையாண்மைக்கு எதிராக சதியில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரி உள்பட 3 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்பிற்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக ஜாகீர் உசேன் (37) என்பவரை கடந்த 2014ம் ஆண்டு சென்னையில் உளவுப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை போலீசார் விசாரித்தனர். அதில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், பெங்களூர் இஸ்ரேல் தூதரகம் மற்றும் தென்னிந்தியாவின் பல பகுதிகள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்தது. இவர் அளித்த தகவலைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் சிவபாலன், முகமது சலீம் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இலங்கை கொழும்புவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் என்பவருக்கும் தொடர்பு இருப்பதும், அவரது ஏற்பாட்டின்படி ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் இந்தியாவில் உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டிருந்ததும், இந்த சதித்திட்டத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மூளையாக செயல்பட்டிருப்பதும் அம்பலமானது. (இதையடுத்து இந்தியா கொடுத்த அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் தூதரை இலங்கை திருப்பி அனுப்பியது). இந்த வழக்கு பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.இந்நிலையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக சதிச்செயலில் ஈடுபட்டது, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைப்பது போன்ற சதிச் செயல்களில் ஈடுபட்டதாக இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி (விசா பிரிவு) அமீர் சுபைர் சித்திக், ரபீ, பாலு என்ற பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி செந்தூர்பாண்டியன் முன்னிலையில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் ஆயிரம் பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ்.எஸ்.பிள்ளை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கள்ளநோட்டு வழக்கு ஒன்றில் கடந்த 2014 ஜூலை மாதம் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரபீ (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனுக்கு கள்ளநோட்டு சப்ளை செய்தது தெரியவந்தது. மேலும், இந்திய இறையாண்மைக்கு எதிராக சதிச்செயலில் ஈடுபட்டதோடு மட்டுமன்றி, கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இந்திய பணமதிப்பை சீர்குலைக்கும் நோக்கத்தில் செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து தேசிய புலனாய்வு போலீசார் ரபீக்கிடம் விசாரித்தனர். இந்த சதிச்செயல்களுக்கு மூளையாக இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியான அமீர் சுபைர் சித்திக் செயல்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக், ரபீ, மற்றும் பாலு என்ற பாலசுப்பிரமணி ஆகியோர் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில், பாகிஸ்தான் தூதரக அதிகாரி தலைமறைவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல பாலு என்ற பாலசுப்பிரமணியையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செந்தூர்பாண்டியன் முன்னிலையில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் தாக்கல் செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் 4 ஆயிரம் பக்கத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 49 சாட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரம் பக்கங்களில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் 59 சாட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

செங்கல்பட்டில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற திருடனை சரமாரி அடித்து கொன்றனர் பொதுமக்கள்
23-2-2018 1:20

சென்னை: செங்கல்பட்டு அருகே வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற திருடனை பொதுமக்கள் பிடித்து அடித்து கொன்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி வீடு உடைத்து கொள்ளை மற்றும் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, வாகனங்களில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பது சமீபகாலமாக அதிகரித்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஏராளமானோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் புகார் மீது போலீசார், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் செங்கல்பட்டு அடுத்த பழவேலியில் நள்ளிரவில் கொள்ளையடிக்க வந்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதன்பிறகும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள், போலீசார் மீது அதிருப்தியிலும் கோபத்திலும் இருந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த காந்தலூர் கிராமத்தை சேர்ந்த பாபு என்பவர் கடந்த 20ம் தேதி வீட்ைட பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மணியளவில் பாபு வீட்டின் கதவு உடைக்கும் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டுக்காரர்கள் எழுந்து பாபு வீட்டை நோக்கி வந்தனர். அப்போது பாபுவின் வீட்டை மர்ம நபர்கள் 2 பேர் உடைத்துகொண்டிருப்பதை பார்த்து ‘திருடன்.. திருடன்..’ என்று சத்தம் போட்டனர். அவர்களது கூச்சல் கேட்டு அப்பகுதி மக்கள் கூடினர். இதனால் திருடர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அதற்குள் பொதுமக்கள் அவர்களை விரட்டிச்சென்று சுற்றிவளைத்தனர். இதில் ஒருவர் தப்பிவிட மற்றொருவர் அவர்களிடம் சிக்கி கொண்டார். அவரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், ஆத்திரம் தீராமல் அந்த நபரை அங்குள்ள ஒரு கம்பத்தில் கட்டி வைத்தும் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அந்த நபர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அந்த நபரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.இதுகுறித்து, கிராம மக்களே செங்கல்பட்டு தாலுகா ேபாலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சக்திவேல், எஸ்ஐ சங்கர் ஆகியோர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், கிராம மக்கள் அடித்து உதைத்ததில் அவர் இறந்ததாக தெரிகிறது. இறந்தவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பவுல்ராஜ் (28) என்பது தெரிந்தது. மேலும், பவுல்ராஜ் மற்றும் உடன் வந்த நபரும் கடந்த ஒரு வாரமாக, இப்பகுதியில் கொள்ளையடிக்க திட்டமிட்டு நோட்டமிட்டுள்ளனர் என்பது போலீசார் விசாணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக புலிப்பாக்கம் விஏஓ பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENTS
பினு கூட்டாளிகள் 3 பேர் சுற்றிவளைப்பு: கத்திகள் பறிமுதல்
23-2-2018 1:18

சென்னை: கல்லூரி மாணவன் கடத்தல் வழக்கில் தொடர்புடைய பினுவின் கூட்டாளிகள் 3 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்தனர். திருமுல்லைவாயல், சிடிஎச் சாலை, கல்லறை அருகில் டாஸ்மாக் பாரில் பினுவின் கூட்டாளிகள் இருப்பதாக திருமுல்லைவாயல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசாரை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் கடத்தல் கும்பல் தப்பி ஓட முயன்றது. அவர்களை விரட்டி சென்று துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.விசாரணையில், சூளைமேடு பெரியார்பாதையை சேர்ந்த கனகு (எ) கனகராஜ் (36), சூளைமேடு பத்மநாபன் நகரை சேர்ந்த விக்னேஷ் (25), திண்டுக்கல் திருப்பாச்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சரவணகுமார் (25) ஆகியோர் என தெரியவந்தது.மேலும், இவர்கள்தான் செனாய்நகரை சேர்ந்த கல்லூரி மாணவன் ஆகாஷை கடத்தியதும், பினுவின் பிறந்தநாள் பார்ட்டியில் போலீசாரிடம் சிக்காமல் தப்பிய முக்கிய ரவுடிகள் என்பதும் தெரிந்தது. இவர்களிடம் இருந்து கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.இவர்களில் கனகராஜ் மீது பூந்தமல்லி, குன்றத்தூர், வடபழனி ஆகிய காவல்நிலையங்களில் கொலை, வழிப்பறி வழக்குகளும், விக்னேஷ் மீது பூந்தமல்லி, மாங்காடு காவல்நிலையங்களில் கொலை, வழிப்பறி வழக்குகள், சரவணகுமார் மீது திண்டுக்கல் காவல்நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் இருப்பது தெரிந்தது. 3 பேரும் பலமுறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர், போலீசார் 3 பேரையும் கைது செய்து, நேற்று மாலை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மாடியில் இருந்த விழுந்த சிறுவன் காயம்
23-2-2018 1:18

சென்னை: சைதாப்பேட்டையில் வீட்டு மாடியில் இருந்து விழுந்த சிறுவன் படுகாயமடைந்தான். சென்னை சைதாப்பேட்டை ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது 9 வயது மகன் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பின் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து சிறுவன் தவறி கீழே விழுந்தான். இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னேற்றம் தொடர வேண்டும் என்றால் வலுவான, நிலையான அரசு நாகலாந்துக்கு தேவை: தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
23-2-2018 1:12

கோகிமா: நாகலாந்து மாநிலத்தில் நிலையான, வலுவான அரசு தேவை என்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 27ல் நடக்கிறது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் ஆளும் என்டிபிபி மற்றும் பாஜ கூட்டணி மீண்டும் இணைந்து தேர்தலை சந்திக்கிறார்கள். என்டிபிபி 40 தொகுதிகளிலும், பாஜ 20 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி துயன்சாங் நகரில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:நாகலாந்து முன்னேற்றத்திற்காக வலுவான, நிலையான அரசு தேவை. எங்களது கூட்டணி அரசு மக்கள் பணம் தேவையற்ற முறையில் சில ஓட்டைகள் வழியே வீணாவதை தடுத்துள்ளது.மேலும் நாட்டின் பிறபகுதிகளை இணைக்கும் வகையில் தரமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் வடகிழக்குப் பகுதிகள் முன்னேற்றத்திற்கான எனது பார்வை, போக்குவரத்து முன்னேற்றத்தில் இருந்து தொடங்குகிறது. 4 வருடத்திற்குள் மத்திய அரசு மூலம் இங்கு 500 கிமீ தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி சாலைப் போக்குவரத்ைத மேம்படுத்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனவே எங்கள் கூட்டணிக்கு மீண்டும் வாக்களித்தால் இந்த நிதி மக்களுக்கு முறையாக சென்றடைவது உறுதி செய்யப்படும். நவீன தொழில்நுட்பம் மூலம் பொதுமக்களின் பணத்தை திருடும் வழிகள் அடைக்கப்பட்டு வருகின்றன. நாகலாந்து மக்கள் அனைவருக்கும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய எனது தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு பேசினார்.

ADVERTISEMENTS
கண்டலேறு அணையில் திறக்கப்படும் நீர் குறைப்பு: தமிழகத்துக்கு ஒன்றரை டிஎம்சி மட்டுமே இதுவரை வந்துள்ளது
23-2-2018 1:9

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததால் தமிழகத்துக்கு இதுவரை ஒன்றரை டிஎம்சி மட்டுமே வந்துள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் ெதலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி இரண்டு தவணைகளாக 12 டிஎம்சி நீர் ஆந்திர அரசு வழங்க வேண்டும். அதன்படி, ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் வழங்க வேண்டும். ஆனால், முதல் தவணை காலத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தர ஆந்திர அரசு மறுத்துவிட்டது. இந்நிலையில், கண்டலேறு அணையில் தற்போது போதிய அளவு நீர் உள்ளதால் இரண்டாவது தவணை காலத்திலாவது 3 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையேற்று, கண்டலேறு அணையில் இருந்து கடந்த டிசம்பர் 27ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டிற்கு கடந்த ஜனவரி 1ம் தேதி வந்தடைந்தது. இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி ஜனவரி 1ம்தேதி முதல் இதுவரை 1.56 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு வந்துள்ளது. கண்டலேறு அணையில் இருந்து தமிழகம் மற்றும் ஆந்திர குடிநீர் தேவைக்காகவும் சேர்த்து தினமும் 2638 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்பட்டது. ஆனால், நேற்று காலை 2,535 ஆக நீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் ஜீரோ பாயிண்டுக்கு இன்று காலை நிலவரப்படி 610 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர் வரத்து 553 ஆக குறைந்தது.

பேரவைத்தலைவர் முடிவு எடுக்காத நிலையில் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது: ஓ.பி.எஸ் தரப்பு வாதம்
23-2-2018 1:7

சென்னை: பேரவைத் தலைவர் முடிவு எடுக்காத நிலையில், ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசு கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் என 11 பேர் வாக்களித்தனர். இதையடுத்து, கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யுமாறு பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் உள்ளிட்ட 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைைம நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணையில் உள்ளது. டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் வாதிட்டார். இதையடுத்து, பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதிட்டார். அவர் வாதிடும்போது, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை விசாரிக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. கொறடாவின் உத்தரவை மீறியதாக அளிக்கப்பட்ட புகார் மீது பேரவைத் தலைவர் எந்த உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. பேரவைத் தலைவர் முடிவு எடுக்காத நிலையில் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட முடியுமா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து, பேரவைச் செயலாளர் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், சட்டப்பேரவை செயலருக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தவில்லை. இதனால், இந்த வழக்கில் சட்ட பேரவை செயலாளர் தரப்பில் பதில் அளிக்க அவசியமில்லை என்று வாதிட்டார்.இதையடுத்து, வழக்கை வரும் 27ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். அன்று திமுக தரப்பு பதில் வாதம் நடைபெறும்.

ஓ.பி.எஸ். கார் திடீர் முற்றுகையால் பரபரப்பு
23-2-2018 1:7

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் ஓ.பி.எஸ். காரை விவசாயிகள் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அனைத்து கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கி நடந்து வந்தது. மதியம் 2 மணிக்கு உணவு இடைவெளிக்காக கூட்டம் சுமார் 1 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாப்பிடுவதற்காக தனது அலுவலகத்துக்கு செல்ல காரில் ஏற முற்பட்டார். திடீரென்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் இளங்கீரன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஓ.பி.எஸ். காரை முற்றுகையிட்டு கோஷம் போட்டனர். இதனால், சிறிது நேரம் தலைமை செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.அப்போது, இளங்கீரன் அளித்த பேட்டியில், “கடந்த 3 நாட்களாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐசிஐசிஐ இன்சூரன்ஸ் தலைமை அலுவலகத்தை இன்சூரன்ஸ் தொகைக்காக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் கொடுக்க வேண்டிய இன்சூரன்ஸ் தொகையை வங்கிகளுக்கு கொடுத்து விட்டதாக கூறுகிறார்கள். ஆனால், 1 ஆண்டு ஆகியும் பணம் கிடைக்கவில்லை. கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் ₹12 கோடி பாக்கி உள்ளது. 10 மாவட்ட விவசாயிகளுக்கு ₹70 கோடி பாக்கி உள்ளது. இதுதொடர்பாக முதல்வர், வேளாண்மை துறை அமைச்சரிடம் பலமுறை கூறியும் எந்தவித உதவியும் செய்யவில்லை. அதனால்தான் இந்த கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகையிட்டோம்” என்றனர்.

ADVERTISEMENTS
ஆவடி சிஆர்பிஎப் வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி காவலர் தற்கொலை: அதிகாரிகள் டார்ச்சரா? போலீஸ் விசாரணை
23-2-2018 1:7

சென்னை: ஆவடியில் உள்ள சிஆர்பிஎப் வளாகத்தில் பயிற்சி காவலர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது சக காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.ஆவடி, ராஜிவ் காந்தி நகர் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎப்) பயிற்சி மையம் உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களில் தேர்வான காவலர்களுக்கு ஓராண்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் அவர்கள் அந்தந்த மாநில சிஆர்பிஎப் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.அதன்படி, இங்கு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த கைலாஷ்சந்தர் ராய் (23) என்பவர் உள்பட பலர் பயிற்சி பெற்று வருகின்றனர். நேற்று காலை 7 மணியளவில் கைலாஷ் துப்பாக்கிகளை பாதுகாக்கும் அறைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, திடீரென அவரது அறையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. உடனே அதிகாரிகள் மற்றும் பயிற்சி காவலர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது காவலர் கைலாஷ்சந்தர் தனது தலையின் வலதுபக்கம் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக்கொண்டு இருந்தார். அவரது அருகே துப்பாக்கி கிடந்தது. இதை பார்த்ததும் மற்ற காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அதிகாரிகள் கைலாஷை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கைலாஷ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.தகவலறிந்ததும் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சிஆர்பிஎப் வளாகத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கைலாஷ் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பயிற்சி காவலர் கைலாஷ்சந்தர் ராய் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது குடும்ப பிரச்னையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.