தினகரன் -- தலையங்கம்

1000 ஆண்டுகள் பழமையான கும்பகோணம் கோயிலில் தீ
23-2-2018 0:45

கும்பகோணம்: 1000 ஆண்டுகள் பழமையான கும்பகோணம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிவன் கோயிலில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது. இதில் சாமி துணிகள் உட்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த சத்திரம்கருப்பூர் மெயின் ரோட்டில் 1000 ஆண்டுகள் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் திருப்பனந்தாள் மடத்துக்கு சொந்தமானது. நேற்று கார்த்திகை நட்சத்திரத்தையொட்டி மூலவர் சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து மூலவர் சன்னதியில் விளக்கு தீபம் ஏற்றி வைத்து விட்டு மதியம் 12 மணிக்கு சிவாச்சாரியார் சுந்தரேசன் சென்று விட்டார்.மதியம் 12.10 மணியளவில் விளக்கிலிருந்து தீ பரவி மூலவர் சுந்தரேஸ்வரருக்கு அணிவிக்கப்பட்டிருந்த துணிகள் எரிந்தது. இதைதொடர்ந்து தீ மேலும் பரவி அர்த்த மண்டபத்தில் பீரோவில் இருந்த சாமி துணிகளும் எரிந்து சாம்பலானது. இதில் 50 பட்டு புடவை, 30 வேட்டிகள், மூலவருக்கு சாத்தியிருந்த நாகாபரணம் மற்றும் அனைத்து பூஜைப்பொருட்களும் தீயில் கருகியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீவிபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பலானது. இதுகுறித்து திருப்பனந்தாள் காசிமடத்தின் கணக்கர் மஞ்சமுனி கொடுத்த புகாரின்பேரில் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 2,095 பேர் இன்று கச்சத்தீவு பயணம்: 60 விசைப்படகுகளில் செல்கின்றனர்
23-2-2018 0:45

ராமேஸ்வரம்: கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர், நெடுந்தீவு, தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம், பாம்பன் பங்குதந்தைகள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து முதல் திருப்பலி பூஜையுடன் இரவில் அந்தோணியார் தேர்ப்பவனி நடக்கிறது. நாளை காலை சிறப்பு திருப்பலி பூஜைக்கு பின் காலை 10 மணிக்கு கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவில் இலங்கையில் இருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மற்றும் சிங்கள பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து 60 விசைப்படகுகளுக்கு மட்டுமே மீன்வளத்துறை அனுமதி அளித்துள்ளது. 2,095 பேருக்கு கச்சத்தீவு செல்ல அடையாள அட்டை வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் இன்று காலை 7 மணியளவில் ராேமஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சோதனைக்கு பின்னர் படகுகளில் கச்சத்தீவு புறப்பட்டு ெசல்கின்றனர்.இருநாட்டு பக்தர்களும் அதிகளவில் வருவதால் அடிப்படை வசதிகளை யாழ்ப்பாணம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வடமாகாண கடற்படை அதிகாரிகள் செய்து வருகின்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு செல்லும் பக்தர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை, போதை பொருள் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றை எடுத்து செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் நாட்டுப்படகில் செல்ல அனுமதிராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே ஓலைக்குடாவை சேர்ந்த வக்கீல் பிரின்சோ ரைமண்ட், மோர்பண்ணையை சேர்ந்த வக்கீல் திருமுருகன், தங்கச்சிமடத்தை சேர்ந்த நல்லதம்பி ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தனித்தனியே தாக்கல் செய்த மனுக்களில் கச்சத்தீவு அந்ேதாணியார் திருவிழாவில் மீனவர்கள் மோட்டார் பொருத்திய நாட்டுப்படகில் சென்று பங்கேற்க அனுமதிக்கும்படி கோரியிருந்தனர். இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ேஹமலதா, ‘‘இந்திய-இலங்கை நாடுகளுக்கு இடையேயான கடல் எல்லை தொடர்பான ஒப்பந்தத்தின் ஷரத்து 5ல், இந்திய மீனவர்களும், பக்தர்களும் விசா மற்றும் பயண ஆவணங்களின்றி கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிற்கு சென்று வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, அடுத்த ஆண்டு முதல் மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கச்சத்தீவுக்கு நாட்டுப்படகில் செல்ல அனுமதிப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

மாஜி துணைவேந்தர், பேராசிரியர் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
23-2-2018 0:44

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி நியமனத்தில், சுரேஷ் என்பவரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக துணைவேந்தர் கணபதி, அவருக்கு உடந்தையாக இருந்ததாக பேராசிரியர் தர்மராஜன் ஆகியோர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான இருவரும் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்தநிலையில், கடந்த 20ம் தேதி மீண்டும் ஜாமீன் கேட்டு இருவரும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை நீதிபதி ஜான்மீனோ முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் ஞானபாரதி ஆஜராகி வாதாடினார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவக்குமார், `கடந்த 3ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் கணபதியின் வீடு, அலுவலகத்தில் சோதனை செய்த போது 4 காசோலையை மறைத்து விட்டார். மேலும், ஆவணங்களை அழிக்க முயற்சி செய்தார். ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே அவரை ஜாமீனில் விடக்கூடாது’ என வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜான்மீனோ, இருவரது ஜாமீன் மனுக்களை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENTS
தமிழகத்தில் முதன்முறையாக நாகையில் சட்ட தன்னார்வலர்களாக 3 திருநங்கைகள் நியமனம்
23-2-2018 0:42

நாகை: நாகை காடம்பாடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், அனைத்து அரசு துறைகளிலும் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு குறித்த ஒருங்கிணைக்கப்பட்ட சட்ட சேவை முகாம் மாவட்ட நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் தமிழகத்திலேயே முதல் முறையாக நாகை ஒன்றியம் செல்லூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் சுப்பிரியா, சுபாஸ்ரீ, சுதா ஆகிய 3 திருநங்கைகளுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவில், சட்ட தன்னார்வலர் பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், உள்ளிட்ட வழக்குகளில் நியாயம் கிடைக்க பெண்கள் மத்தியில், 3 திருநங்கைகளும் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளை வழங்குவார்கள். இதற்காக அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 சம்பளமாக வழங்கப்படுகிறது.

மாணவரிடம் பேராசிரியர் தங்க காசு கேட்ட ஆடியோ: வாட்ஸ்அப்பில் வைரல்
23-2-2018 0:42

கோவை: கோவை பாரதியார் பல்கலை பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக முன்னாள் துணைவேந்தர் கணபதியும், இவருக்கு உதவியதாக பேராசிரியர் தர்மராஜூம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், வாய்மொழி தேர்வு நடக்கும்போது பி.எச்டி மாணவர் ஒருவரிடம் 2 தங்ககாசு, 2 வெள்ளி டம்ளர் கேட்ட ஆடியோ, வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. அது வருமாறு:-பேராசிரியர்: நாளை காலையில் நடக்கும் விழாவுக்கு என்ன ஏற்பாடு செய்துள்ளீர்கள்? மாணவன்: நீங்கள் கூறியபடி 2 தங்க காசு வாங்கிவிட்டேன் சார். இயக்குனருக்கு கூறியபடி எல்லாமே செய்துவிட்டேன் சார். பேராசிரியர்: இயக்குனர் வருகிற மாதிரி தெரியவில்லை. வெளியில் இருந்து வரும் தேர்வு அதிகாரிக்கு என்ன செய்துள்ளீர்கள்? மாணவன்: சார் தேர்வு அதிகாரிக்கு 2 வெள்ளி டம்ளர் வாங்கிவிட்டேன் சார். நீங்கள் சொன்னபடி உங்களுக்கு 2 தங்க காசு வாங்கிவிட்டேன் சார். பேராசிரியர்: அப்படியென்றால் அனைத்தும் ஒரே மாதிரி பேக் செய்து கொடுத்துவிடுங்கள். மாணவன்: நன்றி சார். இவ்வாறு உரையாடல் இடம் பெற்றுள்ளது.

மானிய விலை டூவீலர் திட்டத்துக்கு தடை இல்லை ஹெல்மெட் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
23-2-2018 0:42

மதுரை: மானிய விலையில் டூவீலர் வழங்கும் அரசின் திட்டத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை என்று கூறி மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், ‘‘வேலைக்கு செல்லும் பெண்களுக்காக அரசு சார்பில் மானிய விலை டூவீலர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மானியத்துக்காக ஆண்டுதோறும் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. நடப்பாண்டில் ஒரு லட்சம் டூவீலருக்காக 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். தற்போது தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளது. எனவே, அரசின் நிதி நெருக்கடி மற்றும் கடனை சரிசெய்யும் வரை, மானிய விலையில் டூவீலர் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தாமல் நிறுத்த உத்தரவிட வேண்டும். அரசின் நிதி பற்றாக்குறையை போக்கும் வரை இலவச திட்டங்களை செயல்படுத்தக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘டூவீலர் பெற பல்வேறு விதிகள் உள்ளன. முறையாக கண்காணிக்கப்படும். பணிக்கு ெசல்வோருக்கு மட்டும் வழங்கப்படும். விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுேம வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், ‘‘அரசின் நலத்திட்டங்கள் கொள்கை முடிவு தொடர்பானது. இதில், நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேநேரம், அதிகப்படியான டூவீலர் விபத்துகளில் ஏற்படும் பாதிப்பிற்கு ஹெல்மெட் அணியாததே காரணம் என தெரிய வந்துள்ளது. எனவே, மானியம் பெறும்போது சம்பந்தப்பட்டவர்கள் ஹெல்மெட் வைத்துள்ளனரா என்பதையும், அவர்களது பெயரில் ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீது வைத்திருப்பதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

ADVERTISEMENTS
‘மகளிடம் உடலை காட்ட வேண்டாம்’ கடிதம் எழுதி வைத்து விட்டு அரசு பெண் டாக்டர் தற்கொலை: விருதுநகரில் பரபரப்பு
23-2-2018 0:37

விருதுநகர்: தனது உடலை மகளுக்கு காட்ட வேண்டாமென கடிதம் எழுதி வைத்து விட்டு, அரசு பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் என்ஜிஓ காலனி கம்பர் தெருவில் வசிப்பவர் டாக்டர் இருசப்பன். விருதுநகர் அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். மனைவி ஜனனி (32). தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனநல மருத்துவராக பணியாற்றி வந்தார். இருவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. இவர்களின் மகள் தனிஷா(6). தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது, ஜனனி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற விருதுநகர் ரூரல் போலீசார், ஜனனியின் உடலை மீட்டு, அவர் எழுதிய கடிதம் ஒன்றையும் கைப்பற்றினர். பென்சிலால் எழுதப்பட்ட அந்த கடிதத்தில், `எனக்கு வாழ பிடிக்கவில்லை. வாழ வேண்டுமென்ற ஆசை போய்விட்டது. அனைத்துமே சூனியமாக தெரிகிறது. இதனால் எனது வாழ்வை முடித்துக்கொள்ள முடிவு செய்து விட்டேன். நல்ல கணவர், நல்ல குழந்தை, நல்ல பெற்றோர், நல்ல வேலை என அனைத்தும் இருந்தும், எனக்கு மனதில் வெறுமை ஒன்றே மிச்சமாக உள்ளது. எனது சாவுக்கு யாரும் காரணமல்ல. இதுவே எனது மரண வாக்குமூலம். எனது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம். எனது மகளுக்கு முடிந்தவரை உடலைக்காட்டாமல், `அம்மா ஊருக்குச் சென்று விட்டாள்’ எனக் கூறிவிடுங்கள்’’ என எழுதி உள்ளார்.ஜனனியின் உடல், விருதுநகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவரின் தந்தை டாக்டர் ரவிராமன் அளித்த புகாரின்பேரில் விருதுநகர் ரூரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இறந்ததாக கூறப்பட்ட நபருக்கு இறுதி சடங்கின்போது இதய துடிப்பு: மீண்டும் மருத்துவமனையில் சேர்ப்பு
23-2-2018 0:37

சேலம்:சேலம் பெரமனூர் நாராயணபிள்ளை தெருவை சேர்ந்தவர் கிறிஸ்டோபர்(55). இவர் ரெடிமேட் சப்பாத்தி, பூரி தயாரித்து விற்பனை செய்து வந்தார். கடந்த 4ம் தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுநீரகம் செயலிழந்து விட்டதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்க 6 லட்சம் செலவாகும் என்றும் கூறினர். அதற்கு உறவினர்கள் சம்மதித்ததால், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இதனிடையே, கடந்த திங்கட்கிழமை, அவரது உடல்நிலை மோசமாகி கோமா நிலைக்கு சென்றார். இதனிடையே, நேற்று முன்தினம் இரவு(21ம் தேதி) கிறிஸ்டோபர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடலை வீட்டுக்கு எடுத்துச்சென்ற உறவினர்கள், நேற்று இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்தனர். அப்போது, ஐஸ் பெட்டியில் (பிரீஷர் பாக்ஸ்) வைக்கப்பட்டிருந்த கிறிஸ்டோபரின் உடலுக்கு உறவினர் ஒருவர் மலர் மாலை அணிவித்தார். அப்போது கிறிஸ்டோபரின் உடலில் லேசான அசைவு தெரிந்தது. இதை கண்டு திடுக்கிட்ட உறவினர்கள், பெட்டியின் கண்ணாடியை திறந்து அவரது நெஞ்சில் கை வைத்து பார்த்தபோது, இதய துடிப்பு இருந்தது. இதைத்தொடர்ந்து, அவரை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கிறிஸ்டோபர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதயத்துடிப்பும், நாடித்துடிப்பும் மட்டும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
23-2-2018 0:37

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 176 கனஅடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையில் கடந்த 10 நாட்களாக 49 கனஅடி வீதமே தண்ணீர் வரத்து நீடித்த நிலையில், கர்நாடகாவில் உள்ள கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து 176 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 42.09 அடியாகவும், நீர் இருப்பு 13.19 டிஎம்சியாகவும் உள்ளது. இதற்கிடையே, ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 1000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 500 கனஅடியாக சரிந்தது.

ADVERTISEMENTS
பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வை ரத்து செய்தது செல்லாது: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
23-2-2018 0:37

மதுரை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த அரசின் அறிவிப்பை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.சிவகங்கையை சேர்ந்த இளமதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பாலிடெக்னிக் விரிவுரையாளர் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியில் முறைகேடு நடந்ததால் கடந்த 9ம் தேதி தேர்வை ரத்து செய்வதாக டி.ஆர்.பி. அறிவித்தது. தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. மதிப்பீடு செய்வதில்தான் முறைகேடு நடந்துள்ளது. இதற்கு, விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதே சரியாகும். மாறாக தேர்வை ரத்து செய்தது ஏற்புடையதல்ல. இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இதேபோல் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சபரிமலைமாதாவும் ஒரு மனு செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், ‘முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். தவறு செய்தவர்களுடன் சேர்த்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரையும் தண்டிக்கக்கூடாது’ என கூறப்பட்டது.இதையடுத்து நீதிபதி, ‘‘விடைத்தாள் மதிப்பீட்டில்தான் முறைகேடு நடந்துள்ளது. தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. இதற்காக ஒட்டுமொத்தமாக தேர்வை ரத்து செய்ய முடியாது. எனவே, தேர்வை ரத்து செய்து வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் விடைத்தாள்களை தனியாக பிரித்து கண்டறிவது, மறுமதிப்பீடு செய்வது, சான்றிதழ் சரிபார்ப்பது உள்ளிட்ட நியமன நடைமுறைகள் குறித்து டி.ஆர்.பி. தரப்பில் முடிவெடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.