தினகரன் -- அரசியல்

அரசியலில் குதிக்கும் முன் ரஜினியுடன் ரகசிய உடன்பாடு: கமல்ஹாசன் பரபரப்பு தகவல்
23-2-2018 1:7

சென்னை: அரசியலில் குதிப்பதற்கு முன் ரஜினியுடன் ரகசிய உடன்பாடு செய்துகொண்டதாக நடிகர் கமல்ஹாசன் கூறினார்.இதுபற்றி நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:ஆசான்களைப் பார்ப்பதற்கு முன்பே, நண்பர் ரஜினியை சந்தித்து விட்டேன். அப்போது, சென்னை புறநகரில் காலா படப்பிடிப்பில் அவர் இருந்தார். ‘சந்திக்கலாமா, அதுவும் ரகசியமாக’ என்று கேட்டேன். ‘எங்கு வரலாம்’ என்று பேசி விட்டு, தனியாக காருக்குள் அமர்ந்து பேசினோம். நான் எடுத்த அரசியல் பிரவேச முடிவு, மற்றவர்களுக்குத் தெரியும் முன் அவருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே அந்தச் சந்திப்பு. ‘அப்படியா, எப்ப முடிவெடுத்தீங்க?’ என்று ஆச்சரியமாகக் கேட்டார். ‘மனதளவில் முடிவெடுத்து ரொம்ப நாள் ஆச்சு. ஆனால், காலெடுத்து வைப்பது இப்போதுதான்’ என்றேன்.‘எந்தக் காரணம் கொண்டும் கண்ணியம் குறையக் கூடாது’ என்பதுதான் அன்று நாங்கள் பேசிக் கொண்டதில் முக்கியமான வி‌ஷயம். ஆம், ‘ஒருவேளை எதிரும் புதிருமாக நின்றாலும் மரியாதை குறைந்து விடக்கூடாது. அந்தப் போர் தர்மம் நமக்கு வேண்டும்’ என்றேன். ‘அஃப்கோர்ஸ் கமல்’ என்றார் அவர். அதுவே எங்களின் ரகசிய உடன்பாடு. முடிவெடுத்திருப்பதைச் சொல்ல அன்று சந்தித்தேன் என்றால், ‘கட்சி கட்டப் புறப்படுகிறேன்’ என்று சொல்ல இப்போது சந்தித்தேன். ‘வரலாமா’ என்று கேட்டேன். ‘சாப்பிட்டிட்டிருக்கேன். முடிச்சிடுறேன் வாங்க’ என்றார். ஆனால், நான் போகும்போது சாப்பிட்டுக் கொண்டுதானிருந்தார். ஆம், அவ்வளவு சீக்கிரம் போய்விட்டேன். அதே புரிதலோடுதான் இருக்கிறோம். பேசுகிறோம் என்பதற்காக இதைச் சொல்கிறேன். நாங்கள் நினைத்திருந்தால் வாடாபோடா நண்பர்களாகவே இருந்திருப்போம். ‘நாங்கள் அப்படி இல்லை’ என்று 25 வயது இளைஞர்களாக இருக்கும்போதே முடிவு செய்து விட்டோம்.இவ்வாறு கமல் கூறினார்.நாளை நமதே சுற்றுப்பயணம் தள்ளிவைப்புஅப்துல் கலாம் வீட்டிலிருந்து நேற்று முன்தினம் தனது அரசியல் பிரவேசத்தை துவக்கிய கமல்ஹாசன், மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என்பதை அறிவித்தார். கட்சி கொடியையும் அறிமுகம் செய்தார். மதுரை பொதுக்கூட்டம் முடிந்ததும் முதல்கட்டமாக திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களுக்கு அவர் செல்வதாக இருந்தார். ஆனால், இப்போது திடீரென இந்த பயணத்தை அவர் ஒத்திவைத்துள்ளார். இதுகுறித்து, கமல் தரப்பில் கேட்டபோது, ‘முதலில் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பது மட்டுமே திட்டமாக இருந்தது. ஆனால், இப்போது தென் மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் தோறும் செல்ல கமல் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை முறையாக செய்த பின்னர், 15 நாட்கள் கழித்து நாளை நமதே பயணத்தை தொடங்க கமல் திட்டமிட்டுள்ளார். அதன்படி, முதல்கட்டமாக திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களுக்கு அவர் செல்வார். மற்ற விவரங்கள் வெளியிடப்படும்’ என்றனர்.அமைச்சர்களின் பேச்சு கமல் கருத்துமதுரையில் நேற்று பேட்டியளித்த கமல், ‘‘அடுத்த மாதத்திலிருந்து கிராமங்களை தத்தெடுத்து, மேம்படுத்தும் பணிகளை செய்ய இருக்கிறோம். கட்சிக்கொடியின் சின்னத்தில் சிவப்பு நிறம் உழைப்பையும், வெள்ளை நிறம் நேர்மையையும், கருப்பு நிறம் திராவிடத்தையும் குறிக்கிறது. ஆறு முனை நட்சத்திரங்கள் 6 தென்னிந்திய மாநிலங்களையும், அந்த மாநில மக்களையும் குறிக்கிறது’’ என்றார். மதுரை விமானநிலையத்தில் கமல் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘மதுரையில் நடந்த கட்சிக்கூட்டத்தில் முன் வரிசையில் இருந்தவர்கள் ரசிகர்கள். பின் வரிசையில் அமர்ந்திருந்தது மக்கள் கூட்டமே. இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். முதலில் நாங்கள் ஊழலை தவிர்ப்போம். அதிமுக அமைச்சர்களின் பேச்சில் நல்ல கருத்து இருந்தால் ஏற்போம். இல்லாவிட்டால் விட்டு விடுவோம்,’’ என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார் அளவுக்கு எனக்கு விஞ்ஞானம் தெரியாது: நடிகர் கமல்ஹாசன் பேட்டி
23-2-2018 1:7

மீனம்பாக்கம்: அமைச்சர் ஜெயக்குமார் அளவுக்கு எனக்கு விஞ்ஞானம் தெரியாது என நடிகர் கமல்ஹாசன் கூறினார்.நடிகர் கமல்ஹாசன், மதுரையில் இருந்து நேற்று மதியம் 2.40 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:காவிரி பிரச்னைக்காக சென்னை தலைமை செயலகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி எனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை. ஒருவேளை சட்ட சிக்கல் ஏதாவது இருக்கலாம். தலைமை தேர்தல் ஆணையத்தில் எனது கட்சியை நான் ஏற்கனவே பதிவு செய்துவிட்டேன். அதற்கான ரசீதும் வாங்கிவிட்டேன்.கிராமமே எங்களது தேசியம் என்று நாங்கள் கூறியிருப்பதால், அதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டு இருக்கிறோம். நான் இப்போது அவசரமாக திரும்பி வந்தது எதற்காக என்றால், ஒருவேளை என்னுடைய தேவை இன்று இருக்கலாம் என்ற நம்பிக்கையில் வந்தேன். இல்லை என்றால், நான் மீண்டும் என் வேலையை பார்க்க போய்விடுவேன்.நான் ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த மாதம் சிவகங்கை, திண்டுக்கல், பரமக்குடி உள்பட சில ஊர்களுக்கு செல்வதற்காக முடிவு செய்தேன். அது தொடரும். எங்களது அடுத்த பெரிய பொதுக்கூட்டம், திருச்சியில் நடைபெறும். மதுரையில் நடந்த மிகப் பெரிய கூட்டம்போல், ஏப்ரல் 4ம் தேதி, மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடக்கும்.தமிழக அமைச்சர் ஜெயக்குமார், நான் மரபணு மாற்றப்பட்ட விதை என கூறியிருக்கிறார். ஆம், நான் விதைதான். ஆனால், அவர் மரபணு மாற்றப்பட்ட விதை என விஞ்ஞான ரீதியாக பேசியிருக்கிறார். எனக்கு அந்த அளவுக்கு விஞ்ஞானம் தெரியாது. அவருக்கு தெரிந்து இருக்கலாம். அதனால், அதை பற்றி இப்போது பேச வேண்டாம்.மக்கள் பிரச்னை பற்றி பேசி வாதாடும்போது, திமுக உள்பட அனைத்து கட்சிகளோடு இணைந்து செயல்படுவது கடமை. ஆனால் தேர்தலின்போது, எப்படி செயல்படுவோம் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். நாங்கள் இப்போது ஒரு தனிக்கட்சியை தொடங்கி இருக்கிறோம். எங்கள் பலம் என்ன, கொள்கை என்ன, நோக்கம் என்ன என்பதை பற்றி யோசித்து முடிவு எடுப்போம்.மதுரையில் என் கட்சி தொடக்க விழாவுக்கு வந்த கூட்டத்தை பார்த்து மகிழ்ச்சி அளிக்கிறது. மற்றவை பற்றி பத்திரிகைகள்தான் கூறவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக அமைப்பு தேர்தல் விண்ணப்பங்கள் 1ம் தேதி முதல் பெறப்படும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
23-2-2018 1:2

சென்னை: அதிமுக அமைப்பு தேர்தலுக்கு பூர்த்திசெய்த விண்ணப்பங்கள் 1ம் தேதி முதல் அதிமுக தலைமை அலுவலகத்தில் பெறப்படும் என்று ஓ.பி.எஸ், இ.பி.எஸ். அறிவித்துள்ளனர்.அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:அதிமுகவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்ப படிவங்கள் கடந்த 29ம் தேதி முதல் தலைமைக் கழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் பின் பக்கத்தில், சம்பந்தப்பட்ட கிளைக் கழகத்திற்கு, கிளைக் கழகச் செயலாளர் அல்லது ஒன்றியக் கழகச் செயலாளர், நகர வார்டு கழகத்திற்கு, வார்டு செயலாளர் அல்லது நகரக் கழகச் செயலாளர், பேரூராட்சி வார்டு கழகத்திற்கு வார்டு செயலாளர் அல்லது பேரூராட்சிக் கழகச் செயலாளர்.மாநகராட்சி வட்டக் கழகத்திற்கு, வட்ட செயலாளர் அல்லது பகுதி செயலாளர், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு உட்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் ஆகிய யாரேனும் ஒருவரின் கையொப்பத்தை அவசியம் பெற வேண்டும். அதன் பிறகு விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர் ஆய்வு செய்து, மாவட்டக் கழகத்தின் முத்திரையிட்டு கையொப்பமிட வேண்டும்.பொறுப்பாளர்களின் கையொப்பத்தோடு கூடிய, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உறுப்பினர் ஒருவரின் உரிமை சீட்டிற்கு ₹10, 25 பேர் அடங்கிய ஒரு உறுப்பினர் படிவத்திற்கு ₹250. பிறமாநிலங்களின் உறுப்பினர் ஒருவரின் உரிமை சீட்டிற்கு ₹5, 25 பேர் அடங்கிய ஒரு உறுப்பினர் படிவத்திற்கு ₹125 கட்டணத் தொகையுடன், வருகிற 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை தலைமை அலுவலகத்தில் பெறப்படும். பூர்த்தி செய்யப்பட்டு தலைமைக் கழகத்தால் திரும்பப் பெறப்படும் விண்ணப்பப் படிவங்களுக்கான உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில், மாவட்ட செயலாளர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் நிர்வாகிகளும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் முழுமையாக ஈடுபட வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENTS
சொல்லிட்டாங்க...
23-2-2018 0:58

தமிழ் பற்றியும், தமிழகத்தை பற்றியும் ஒன்றும் தெரியாத டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை வைத்து நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கி இருப்பது திராவிடத்துக்கும், தமிழகத்துக்கும் பெருத்த அவமானமாகும். - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கூறும் கமல் ஊழல் புகாரில் சிக்கிய சந்திரபாபு நாயுடுவிடம் ஆலோசனை கேட்டுள்ளார். நாயுடு பற்றி அவர் தெரிந்து பேசுகிறாரா இல்லை தெரியாமல் பேசுகிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். - நடிகை ரோஜா.தமிழகத்தை சேர்ந்த 3000 கூலித் தொழிலாளர்கள், செம்மரம் கடத்தியதாக ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. - பாமக நிறுவனர் ராமதாஸ். காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை பெற்றுத்தர பாரதிய ஜனதா எப்போதும் துணை நிற்கும்.- தமிழக பாஜ தலைவர் தமிழிசை.

மத்திய, மாநில அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இலவச கழிப்பறை கட்டும் திட்டத்தில் ஊழல்: அன்புமணி குற்றச்சாட்டு
23-2-2018 0:45

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக கழிப்பறை கட்டித் தரும் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டப்படி ஒரு வீட்டில் கழிப்பறை கட்ட ரூ.12,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதில் 7,200 ரூபாயை மத்திய அரசும், 4800 ரூபாயை மாநில அரசும் வழங்குகின்றன. இந்தத் திட்டத்தில் 3 வழிகளில் ஊழல் நடப்பது தெரியவந்துள்ளது. ஒதுக்கப்படும் நிதியில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் செலவழித்து விட்டு, மீதமுள்ள பணத்தை ஆளுங்கட்சி, அதிகாரிகள் கூட்டணி சுருட்டிக் கொள்கிறது. இவ்வகையில் மட்டும் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல நூறு கோடிகள் கொள்ளையடிக்கப்படுகிறது. இத்திட்டத்தை உருவாக்கியதும், இதற்கான நிதியில் 60 சதவீதம் ஒதுக்குவதும் மத்திய அரசு தான். மாநில அரசு மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதாலேயே ஆளுங்கட்சியினர் ஊழல் செய்வதை அனுமதிக்கக்கூடாது. பிரதமர் மோடி இதில் தலையிட்டு, ஊழல்வாதிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து துறைகளிலும் ஊழல் செய்யும் மெஜாரிட்டி இல்லாத அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: திமுக வர்த்தகர் அணி தீர்மானம்
23-2-2018 0:44

சென்னை: அனைத்து துறைகளிலும் கொள்ளையடிக்கும் அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று திமுக வர்த்தகர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக வர்த்தகர் அணி மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் தேனாம்பேட்டை, அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் காசிமுத்துமாணிக்கம் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் கிரகாம்பெல், துணைச் செயலாளர்கள் பாண்டிச்செல்வம், முத்துச்சாமி, அசோக்பாண்டியன், முகவை கிருபானந்தம், சிவகாசி வனராஜ், சேப்பாக்கம் மணி, ராமநாதபுரம் ராமர், மதுரை தனசெல்வம், வேப்பூர் பெரியசாமி, யுவராஜ், சுந்தரவரதன், பல்லவிராஜா, ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: பேரூந்து நிலையங்களில் தேநீருடன் கூடிய ‘மினி ஹோட்டல்’ நடத்திட காவல் நிலையம் அனுமதிப்பதுடன், இரவு நேர கடைகள் பயமின்றி நடத்திட காவல் அதிகாரிகள் பாதுகாப்பு தந்திட வேண்டும். வணிகர் நல வாரியத்தை மீண்டும் அமைத்து, வாரியத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்குபெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூந்து கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். அதிமுக ஆட்சியில் கல்லூரி துணைவேந்தர் உள்பட எல்லாத் துறையிலும் ஊழல் என கொள்ளை அடிக்கும் மெஜாரிட்டி காணமுடியாத எடப்பாடி அரசை டிஸ்மிஸ் செய்து தேர்தல் அறிவித்து புதிய அரசை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENTS
காவிரி நதிநீர் தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை தமிழகத்தின் உரிமை பறிபோகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை
23-2-2018 0:42

விழுப்புரம்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விழுப்புரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகர் கமல் கட்சி தொடங்கியதற்கு எனது வாழ்த்துக்கள். தமிழர்களையும், அவர்களது தன்னம்பிக்கை பற்றி இந்த நேரத்தில் அடுத்த மாநில முதல்வர்கள் சொல்லித் தருகிறார்கள். கெஜ்ரிவாலுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்மந்தம். டெல்லி தமிழர்களுக்கு உதவி செய்யாதவர்தான் கெஜ்ரிவால். காகித பூ என்று கமலை விமர்சனம் செய்தபோது தன்னை பூ இல்லை விதை என கூறியுள்ளார். அது காகித விதையா என்று சொல்லவில்லை?. காவிரி நதிநீர் தீர்ப்பு திருப்தியளிக்கும் வகையில் இல்லை. அதற்காக உதாசீனப்படுத்தவும் முடியாது. கிடைக்கிற நீரையாவது தமிழகத்திற்கு பயன்படுத்த வேண்டும். தமிழகத்தின் உரிமை கொஞ்சம், கொஞ்சமாக பறிபோய்கொண்டிருக்கிறது. வாக்குரிமை பெற்ற யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வர உரிமை உள்ளது. அவர்களின் சிந்தனைகள் எப்படி உள்ளது, நோக்கம் என்ன? கடந்த காலத்தில் என்ன நன்மைகள் செய்தார்கள். எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் எடப்பாடி உறுதி ஒருமித்த கருத்துடன் தமிழக உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்போம்
23-2-2018 0:32

சென்னை: “அனைத்து கட்சியினரும் ஒருமித்த கருத்துடன் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு பாடுபடவேண்டும்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். காவிரி நதிநீர் பிரச்னை குறித்து தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:காவிரி நதிநீர் போன்ற முக்கியமான எந்த ஒரு பிரச்னை ஆனாலும், அதன்மீது பல்வேறு கருத்து வேறுபாடுகள் நம்மிடையே இருந்தாலும் இன்று முதல் அனைத்து கட்சியினரும் தமிழ்நாட்டு மக்களுக்காக ஓரணியில் திரண்டு, ஒருமித்த கருத்துடன் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு பாடுபடவேண்டும். காவிரி நதிநீர்ப் பிரச்னை, காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்து இருக்கிறது. * 4.6.1990- காவிரி நடுவர்மன்றத்தை மத்திய அரசு அமைத்தது. * 25.6.1991 - நடுவர்மன்றம் இடைக்கால ஆணையை பிறப்பித்தது. இதில் கர்நாடகா, தமிழ் நாட்டிற்கு மேட்டூர் அணையில் ஆண்டு தோறும் 205 டிஎம்சி அடி நீர் மாதாந்திர, வாராந்திர அடிப்படையில் அளிக்க ஆணையிட்டது. * 25.7.1991-கர்நாடக அரசு நடுவர் மன்ற இடைக்கால ஆணையை செயல் இழக்கும் விதமாக ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்தது. * 22.11.1991- உச்சநீதிமன்றம் கர்நாடக அரசின் அவசர சட்டம் செல்லாது எனவும், காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட வேண்டும் எனவும் கருத்துரு வழங்கியது. * 10.12.1991-நடுவர் மன்ற இடைக்கால ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. * 1992-நடுவர் மன்ற இடைக்கால ஆணையை செயல்படுத்துவதற்கான ஒரு அமைப்பினை அமைக்க மத்திய அரசுக்கு ஆணையிடக்கோரி தமிழ்நாடு அரசு ஒரு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. * 5.2.2007- நடுவர் மன்றம் தனது இறுதி ஆணையை பிறப்பித்தது. * ஏப்ரல், மே 2007 -நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மீது கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு அரசுகள் உச்சநீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் தாக்கல் செய்தன.* 19.2.2013 - மத்திய அரசு, நடுவர்மன்றத்தின் இறுதி ஆணையை அரசிதழில் வெளியிட்டது. * 11.11.2013 - காவிரி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால், மீண்டும் ஒரு இடைக்கால மனுவை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது. * 20.09.2016 -தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் இவ்வமைப்புகளை உடன் அமைக்க ஆணை வேண்டியதன் பேரில் 20.09.2016 அன்று காவிரி மேலாண்மை வாரியத்தை நடுவர்மன்ற இறுதி ஆணையில் பரிந்துரைத்தபடி நான்கு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசிற்கு ஆணையிட்டது. * 30.9.2016 - உச்சநீதிமன்றம் இதை மீண்டும் உறுதி செய்து 4 நாட்களுக்குள் இவ்வமைப்புகள் அமைக்கப்பட வேண்டுமென ஆணையிட்டது. * 3.10.2016- எனினும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணைகளை மாற்றியமைக்கும்படி ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இம்மனு 4.10.2016 அன்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை ஒத்திவைத்து ஆணையிட்டது. * 9.12.2016-இதற்கிடையே மாநிலங்கள் தாக்கல் செய்த சிவில் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உகந்தவை என உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. * 16.2.2018-சிவில் வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பில், 6 வார காலத்திற்குள் இவ்வமைப்புகளை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.கர்நாடகத்தின் சுயநலப்போக்குதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: காவிரியை, முழுவதும் தனக்கே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கர்நாடகத்தின் சுயநலம்தான், காவிரி பிரச்னை உருவாகக் காரணம். கர்நாடகத்தின் இந்த சுயநலப் போக்கு, இன்றுவரை ஒரு சிறிதும் மாறவில்லை என்பதை, அவர்களது அண்மைக்கால பேச்சுகள் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் தற்போது அளித்துள்ள இறுதித் தீர்ப்பில் இதை உறுதி செய்து, பன்மாநில நதிகள் தேசிய சொத்து என்றும், அதை எந்த மாநிலமும் தன் உரிமை கோர இயலாது என்றும் 6 வாரங்களுக்குள் செயல் திட்டம் வகுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, கர்நாடகா நமக்கு வழங்க வேண்டும் என்று ஆணையிட்டிருக்கின்ற, 177.25 டிஎம்சி தண்ணீரை, எந்த தடையும் இன்றி, உரிய காலத்தில் நாம் பெறுவதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் சொல்லப்பட்ட, 14.75 டிஎம்சி தண்ணீரை குறைத்து உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது குறித்தும், சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை பெற்றும், உங்களின் மேலான கருத்தின்படி என்ன நடவடிக்கை எடுப்பது குறித்து எல்லாம் நாம் கலந்துரையாடி, தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வரவேண்டிய தண்ணீரை பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
23-2-2018 0:32

சென்னை: ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டு இயக்கமான ‘ஜாக்டோ-ஜியோ” சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி ஊதிய உயர்வு வழங்கியுள்ளது. ஆனால் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அமல்படுத்தும் போது விடுபட்டுப் போன 21 மாதகால ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அரசு ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 21 முதல் தொடர் மறியல் போராட்டத்தை ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நடத்தி வருகிறார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் போராட்டத்தை அடக்குமுறையால் தடுத்து நிறுத்தி, பெண் ஊழியர்கள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர்களை கைது செய்துள்ள அரசின் நடவடிக்கையை தமிழக காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENTS
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி மோடியை 39 கட்சிகள் சந்திக்க முடிவு: முதல்வர் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
23-2-2018 0:1

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் குழுவினர் பிரதமரை நேரில் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவது என்று நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழக விவசாயிகளின் நீண்டநாள் பிரச்னையான காவிரி நதிநீர் பிரச்னையில் கடந்த 16ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில், தமிழகத்துக்கு ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீர் கர்நாடகா அரசு தர வேண்டும் என்பதை குறைத்து 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழக அரசு உரிய முறையில் வழக்கை கையாளாகாததால் தான் தீர்ப்பு தமிழகத்துக்கு பாதகமாக அமைந்துள்ளதாக தமிழக எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டின. எனவே, காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க அரசு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. தமிழக முதல்வர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவில்லை என்றால் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்துவேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். இதையடுத்து, காவிரி நதிநீர் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வரும் 22ம் தேதி (நேற்று) முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அறிவித்தபடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை, தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடியின் கூட்ட அரங்கில் அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. அரசு சார்பில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணி துறை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சிகள் தரப்பில், திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, பாஜதலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் அமைச்சர் மூர்த்தி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகைதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹர் அலி, பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட 39 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 14 விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கூட்டம் சரியாக 10.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ெதாடங்கியது. கூட்டத்தில் பங்கேற்க 9.40 மணி முதலே கட்சி தலைவர்கள், விவசாயி சங்க பிரதிநிதிகள் வரத் தொடங்கினர். முதல்வர், துணை முதல்வர் காலை 10.23 மணிக்கு வந்தனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் 10.27 மணிக்கு வந்தார். அனைத்துக்கட்சி தலைவர்களை நாமக்கல் கவிஞர் மாளிகையின் கீழ்தளத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5.15 மணி வரை சுமார் 7 மணி நேரம் நடைபெற்றது. மதியம் 2 மணி முதல் 3 மணி வரை உணவு இடைவேளைக்காக கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது, முதல்வர் எடப்பாடி, எதிக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் 10வது மாடியிலேயே உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். கூட்டத்தில் ஒவ்வொரு கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அனைவருக்கும் 5 நிமிடம் பேச அனுமதி அளிக்கப்பட்டது.காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றம் கடந்த 16ம் தேதி பிறப்பித்த தீர்ப்பின் மீது எடுக்கப்பட வேண்டிய மேல் நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து, அவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு கீழ்க்கண்ட மூன்று தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அது வருமாறு:* தமிழ்நாட்டுக்குரிய பங்கு நீரினை உரிய காலத்தில் வழங்குவதற்கு ஏதுவாக, அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உச்ச நீதிமன்றத்தின் கடந்த 16ம் தேதி நாளிட்ட தீர்ப்பின்படி, ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டி வலியுறுத்தப்படும். * உச்சநீதிமன்ற தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு, காவிரி நடுவர் மன்றம் இறுதி ஆணையில் வழங்கிய நீரில், 14.75 டிஎம்சி அடி நீரை குறைத்து கர்நாடகத்திற்கு கூடுதலாக வழங்கி உத்திரவிட்டது குறித்து, அனைத்துக்கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு, சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.* முதல்வர் தலைமையில், அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன் பிரதமரை விரைவில் நேரில் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கவும் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிலுள்ள தமிழ்நாட்டிற்கு சாதகமான அம்சங்களை உடனடியாக நிறைவேற்றி தருமாறும் வலியுறுத்தப்படும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தாமதமாக வந்த தமிழிசைஅனைத்துக்கட்சி கூட்டம் காலை 10.30க்கு நடக்கும் என்று எல்லோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் 10.30 மணி வரை பாஜவில் இருந்து யாரும் வரவில்லை. அதனால் கூட்டத்தை பாஜ புறக்கணித்து விட்டதாக பரபரப்பு நிலவியது. ஆனால், 7 நிமிடம் தாமதமாக 10.37க்கு தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் வந்தார். ஆனால் அமைச்சர்கள் மேலே சென்றுவிட்டதால் தமிழிசையை வரவேற்க யாரும் இல்லை. பின்னர் அவர் தனியாக லிப்ட்டில் ஏறி சென்று கூட்டத்தில் பங்கேற்றார்.அனைத்து கட்சி கூட்டம்; தலைவர்கள் கருத்துதமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்: உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு ஏற்கனவே ஒரு வாரம் கடந்து, இன்னும் 5 வாரம் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கங்களில் பிரதிநிதிகளையும் டெல்லிக்கு உடனடியாக அழைத்துச் சென்று, பிரதமரை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.காவேரி விவகாரத்தில் உள்ள சட்ட சிக்கல்களை எல்லாம், சட்ட வல்லுநர்களோடு இந்த அரசு ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டோம். அதையும் அரசு ஏற்றுக் கொண்டு தீர்மானமாக நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது.மதிமுக பொது செயலாளர் வைகோ: உச்ச நீதிமன்றம் தந்து இருக்கிற இந்த அநீதியான தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும். கே. பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): காவிரி விஷயத்தில் இது வரை தீர்ப்பு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த தீர்ப்பு எதையுமே கர்நாடக அரசு நிறைவேற்றாமல் அடம் பிடித்து வருகிறது. இதற்கு பொறுப்பான மத்திய அரசு குறைந்தபட்ச கடமையை கூட செயல்படுத்தாமல் தட்டி கழித்து வந்துகொண்டு இருக்கிறது.திருநாவுக்கரசு (தமிழக காங்கிரஸ் தலைவர்): பிரதமர் சென்னை வரும் போது நேரம் கொடுத்தால் அவரை பார்த்து இந்த கருத்துக்களை வலியுறுத்தவேண்டும்.தமிழிசை சவுந்தரராஜன் (தமிழக பாஜ தலைவர்):உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக பாஜவுக்கு வருத்தமளிக்கிறது. தற்போது கிடைக்கும் நீரை வலியுறுத்தி பெற தமிழக அரசுக்கு தமிழக பாஜ உறுதுணையாக இருக்கும். திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்): உச்ச நீதிமன்றம் 6 வாரத்திற்குள் சாக்கு போக்கு சொல்லாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவேண்டும். ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி): சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும் எனவும், பிரதமரை சந்தித்து வலியுறுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளோம். தமிழக நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் அமைச்சரவை அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளோம்.ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): பிரதமரை சந்திக்க 4 அல்லது 5 நாட்களில் தமிழக அரசு டெல்லி அரசோடு பேசி ஏற்பாடு செய்வதாக கூறியிருக்கிறது. நிச்சயம் இது விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும். சரத்குமார் ( சமத்துவ மக்கள் கட்சி தலைவர்): மக்களின் பிரச்னைகளுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றினையும் என்று தெரியவந்துள்ளது.மோகன்ராஜ்(தேமுதிக முன்னாள் எம்எல்ஏ): நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.அய்யாக்கண்ணு(விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்): காவிரி மேலாண்மை வாரியத்தை முதல்வர் கேட்டும் அமைக்கவில்லை என்றால் பிரதமர், சட்டசபை தேர்தலை தான் பெரிதாக நினைத்து கர்நாடகத்துக்கு சாதமாக இருக்கிறார் என்று கூறலாம். முதல்வர் எடப்பாடியுடன்ஸ்டாலின் மதிய உணவுஅனைத்துக்கட்சி கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு கூட்டம் நடைபெற்ற அரங்கம் அருகில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டனர்.7 மணி நேரம் நடந்த கூட்டம்அனைத்துக்கட்சி கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இதில் 39 அரசியல் கட்சி வர்கள், 14 விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மதியம் 2 மணிக்கு உணவு இடைவேளைக்காக கூட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் 3 மணிக்கு மீண்டும் கூட்டம் தொடங்கி மாலை 5.15 மணிக்கு முடிந்தது. சுமார் 7 மணி நேரம் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.