தினகரன் -- அறிவியல்

அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி
6-2-2018 12:4

புபனேஸ்வர் : அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அக்னி 1 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிசாவில் பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை 700 கிமீ தொலைவில் இருந்து இலக்கை துல்லியமாக தாக்கியது.

1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு
1-2-2018 21:46

லக்னோ: நாட்டிலேயே முதல் முறையாக, உத்தரபிரதேச மாநிலத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட 1,000 சட்டங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. உ.பி.,யில் பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். தற்போதைய சூழ்நிலைக்கு பொருந்தாத, 1,000 சட்டங்களை, உ.பி., அரசு பட்டியலிட்டுஉள்ளது. இந்த சட்டங்கள் அனைத்தையும், ஒரே சட்ட திருத்த மசோதா மூலம், ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, உ.பி., மாநில சட்ட அமைச்சர், பிரிஜேஷ் பதக், நிருபர்களிடம் கூறியதாவது: பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட பல சட்டங்கள் தற்போதைய காலத்துக்கு பொருந்தாதவையாக மாறியுள்ளன. இத்தகைய சட்டங்களை ஆய்வு செய்து வருகிறோம். இந்த சட்டங்கள் அனைத்தையும், ஒரே சட்ட திருத்தம் மூலம், ரத்து செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். உ.பி., அரசு ரத்து செய்யவுள்ள சட்டங்களில், 1890ல் உருவான, ஐக்கிய மாகாண சட்டமும் அடங்கும். இந்த சட்டத்தை, பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல், மேற்கு மாகாணங்கள் மற்றும் அவுத் பகுதியை சிறப்பாக நிர்வகிப்பதற்காக கொண்டுவந்தார். உ.பி., மாநிலம் உருவாகி, 68 ஆண்டுகள் ஆனதை, அம்மாநில அரசு, சமீபத்தில் கொண்டாடியது. அதை தொடர்ந்து, பிரிட்டிஷ் ஆட்சி கால சட்டங்களை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. நாட்டில், பிரிட்டிஷ் ஆட்சி கால சட்டங்கள், இவ்வளவு அதிகமாக ஒரே நேரத்தில் ரத்து செய்யப்படுவது, இதுவே முதல் முறை.

152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்
30-1-2018 12:56

பூமியானது சூரியனின் சுற்று வட்ட பாதையில் சுற்றி வருவதை கிரகண பாதை என்று அழைக்கின்றோம். சந்திரனும் பூமியை சிறு வட்டப்பாதையில் சுற்றி வருகின்றது. ஆனால் சந்திரனின் சுற்றுப்பாதை சரியான கிரகண பாதையில் அமையவில்லை. அது சுமார் 5 டிகிரி சாய்வு கோணத்தில் அமைந்துள்ளது. இதனால் மிக அரிதாக நிலவு பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் உள்ள கற்பனைக் கோட்டை கடக்கும் போது சூரியகிரகணம் ஏற்படுகிறது. எனவே சந்திரனின் பாதை கிரகண பாதையோடு ஒன்றியிருக்கும்போது அமாவாசையின்போது சூரிய கிரகணமும் பவுர்ணமியின்போது சந்திரகிரகணமும் நிகழ்கிறது.இந்த கிரகணம் மேற்கு வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பெருங்கடல் போன்ற பெரும்பாலான பகுதிகளிலும், இந்தியாவிலும் தெரியும். சந்திர கிரகணத்தை திறந்தவெளியில் தொலைநோக்கியின்றி கண்டுகளிக்கலாம். விண்வெளியில் வெறும் கண்களால் பார்க்கும்போது பாதிப்பு ஏதும் ஏற்படாது. மேலும் ஒரு முழு சந்திர கிரகணத்தை இந்தியாவில் 27.7.18 இரவு முதல் 28.7.18 வரை வரை காணலாம்.இன்று (31ம் தேதி) நிலவானது பூமியின் சுற்றுப்பாதையில் அருகில் வருவதால் சற்று பெரியதாக காணப்படும். 2018ம் ஆண்டில் தெரிகின்ற 2வது சூப்பர் மூன் இதுதான். இதற்கு முன் கடந்த 2ம் தேதி சூப்பர் மூன் தென்பட்டது. இந்த மாதத்திலேயே இரண்டு முறை பவுர்ணமி தென்படுவதால் இதனை நீல நிலவு (ப்ளூ மூன்) என்றழைக்கப்படுகிறது. இதேபோல் வரும் மார்ச் மாதம் இரண்டு பவுர்ணமி ஏற்படுகிறது. மார்ச் 31ம் தேதி ஏற்படுகின்ற பவுர்ணமி அடுத்த நீலநிலவு ஆகும். முழு சந்திர கிரகணம் நீல நிலவில் தென்படுவது மிகவும் அரிதானது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கிரகணம் தான் நாளை தென்படுகிறது. இது மீண்டும் 152 ஆண்டுகளுக்கு பின்னர் காணலாம். இது போன்ற நிகழ்வு கடந்த 1866 மார்ச் 31ம் தேதி ஏற்பட்டது.

ADVERTISEMENTS
150 ஆண்டுகளுக்குப் பிறகு தெரியும் அரிதான முழு சந்திர கிரகணம்: ப்ளூ மூன் என வர்ணனை!
4-1-2018 15:9

வாஷிங்டன்: 2018-ன் முதல் சந்திரகிரகணம் இம்மாதம் 31-ம் தேதி நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிதான முழு சந்திர கிரகணம் இது ஆகும். மேலும் இது ‘நீல நிலா’ (ப்ளூ மூன்) என்று அழைக்கப்படுகிறது. ஜனவரி 31- ம் தேதி நள்ளிரவில் இந்த முழு சந்திரகிரகணம் ஏற்படுவதால் பசிபிக் பெருங்கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டம், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகியவை இந்த கிரகணம் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளது. இதேபோல் மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் மாலை வேளையில் முழுயாகத் தெரியும். மேலும் அலாஸ்கா, வடமேற்கு கனடா, ஹவாய் ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் முழுமையாக தெரியும். இருப்பினும் வட மற்றும் மத்திய அமெரிக்காவில் சந்திரன் மறையும் நேரம் குறுக்கிடும்.இந்த முழு சந்திர கிரகணம் சுமார் 77 நிமிடங்கள் வரை நிகழ வாய்ப்புள்ளது என்றும் முழு கிரகணம் தெரியும் நேரத்தில் சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகவும், மேல் விளிம்பு இருளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2028ம் ஆண்டு தான் அடுத்த முழு சந்திரகிரகணம் நிகழும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் இது முக்கியவத்துவம் உள்ள நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

பிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம் இருப்பது உறுதியானது: கெப்ளர்-90 குடும்பத்தில் 8வது கோள் கண்டுபிடிப்பு
15-12-2017 12:40

கலிபோர்னியா: சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் 7 புதிய கோள்கள் இருப்பதாக நாசா முன்னர் அறிவித்திருந்தது. சூரிய குடும்பத்தை போன்று இக்கோள்களும் பெரிய நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. இந்த குடும்பத்திற்கு கெப்ளர் 90 என பெயரிடப்பட்டது. இந்நிலையில், அக்குடும்பத்தில் 8வது கோள் நாசாவின் கெப்ளர் ஸ்பேஸ் டெலஸ்கோப் மற்றும் அமெரிக்க விண்வெளி கழகத்தின் செயற்கை நுண்ணறிவு முறை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோள் பூமியை போன்று 30 சதவீதம் அதிக எடையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது சூரிய குடும்பத்தை போன்று, ஒரு நட்சத்திரத்தை மையமாக கொண்டு சுற்றி வரும் பல கோள்கள் அடங்கிய மண்டலம் உள்ளது. ஏராளமான கோள்களை கொண்ட இந்த மண்டலத்தில் எதுவும் உயிரினங்கள் வாழ ஏற்றதாக இல்லை. இருப்பினும் இவற்றில் 8 கோள்கள் பூமியைப் போன்ற தோற்றம் கொண்டதாக உள்ளன. இந்த கோள்களின் மையமாக விளங்கும் நட்சத்திரம் கெப்ளர் 90 என அழைக்கப்படுகிறது. இது 2545 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. கெப்ளர் 90 நட்சத்திர மண்டலம், மினி சூரிய குடும்பம் போன்றே காணப்படுகிறது. கோள்கள் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாக காணப்படும் இந்த நட்சத்திர மண்டலத்தில் சிறிய அளவிலான கோள்கள் உள் பகுதியிலும், பெரிய கோள்கள் வெளி பகுதியிலும், நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கெப்ளர் 90ஐ என்ற கோள், பூமியை போன்றே இருந்தாலும், இது நட்சத்திரத்தை ஒருமுறை சுற்றி வர 14.4 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இதன் பரப்பளவு மிகுந்த வெப்பம் நிறைந்ததாக இருக்கலாம். தோராயமாக 426 செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கலாம். செவ்வாய் கிரகத்தை விட இது வெப்பம் நிறைந்ததாக இருக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.

பிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம் : நாசா நிபுணர்கள் கண்டுபிடிப்பு
15-12-2017 8:57

வாஷிங்க்டன் : பிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம் இருப்பதை நாசா நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். நமது சூரியக் குடும்பத்தைப் போல் 8 கிரகங்களுடன் இருப்பதும் தெரிய வந்துள்ளதாக நாசா தகவல் அளித்துள்ளது. நாசா விண்ணுக்கு அனுப்பிய கெப்ளர் விண்கலம் புதிய சூரியக் குடும்பத்தை அடையாளம் கண்டுள்ளது.

ADVERTISEMENTS
ஆப்ரிக்க இன யானைகள் விரைவில் அழிந்துவிடும் ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
29-11-2017 12:12

ஜெனிவா: ஆப்ரிக்க இன யானைகள் விரைவில் அழிந்துவிடும் ஆபத்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவாவில் அழிந்துவரும் விளங்குகளின் பாதுகாப்பு தொடர்பான 69வது மாநாடு தொடங்கியுள்ளது. ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் கடந்த 2006ம் ஆண்டு முதல் சட்டத்திற்கு புறம்பாக யானைகள் வேட்டையாடப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு ஆப்ரிக்க யானை கொல்லப்பட்டு வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் யானைகளின் மக்கள் தொகை 62 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடி நடிவடிக்கை எடுத்து ஆப்ரிக்க இன யானைகளை பாதுகாக்காவிட்டால் அவற்றின் இனம் வெகு விரைவில் முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
27-11-2017 17:48

பென்சில்வேனியன்: நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை ஈக்கள் பரப்புவதாக விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். வீட்டில் பெரும்பாலும் காணப்படும் ஈக்கள் மற்றும் நீலநிற ஈக்கள், 600 விதமான பாக்டீரியாக்களை பரப்புவதாக மரபணு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பாக்டீரியக்கள், பெரும்பாலும், வயிற்று வலி, ரத்தத்தில் விஷம் ஏறுதல், நிமோனியா ஆகிய மனிதர்களுக்கு தொடர்புடைய நோய்களை பரப்புகின்றன. ஈக்களால், தனது கால்கள், இறக்கைகள் மற்றும் பாதங்கள் மூலமாக, நோய்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரப்ப முடியும். சொல்லப்போனால், அவை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், அவற்றால் உயிருடன் உள்ள பாக்டீரியாக்களைப் பரப்ப முடியும். வீட்டில் பரவலாக காணப்படும் ஈக்களின், உடலின் மேலும், உடலினுள்ளும் இருக்கும் நுண்ணுயிரிக்கள் குறித்து மரபணு ஆய்வுமுறை வழியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. வீட்டில் பொதுவாக பார்க்கக்கூடிய ஈக்கள் 351 வகையான பாக்டீரியாக்களை பரப்புகின்றன. சூடான காலங்களில் வரும், நீலநிற ஈக்கள் 316 வகை பாக்டீரியாக்களை பரப்புகின்றன. இந்த இருவகை ஈக்களாலும், அதிகப்படியான பாக்டீரியாக்கள் பரப்பப்படுகின்றன. பொதுசுகாதார அதிகாரிகளால், நோய்களை திடீரென பரப்பும் காரணிகளாக ஈக்கள் பார்க்கப்பட்டிருக்கலாம் என்று இந்த ஆய்வை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குடிநீரில் இருந்து புளூரைடுவை நாவல்பழ விதை பொடி நீக்கும்: வாய் புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு
28-10-2017 1:37

ஐதராபாத் : குடிநீரில் அதிகப்படியாக உள்ள புளூரைடு உப்பை நீக்க நாவல்பழ விதைப்பொடி பயன்படுகிறது என்பதை இன்ஜினியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.நாம் குடிக்கும் குடிநீரில் புளூரைடு உப்பு உள்ளது. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மிலி கிராம் அல்லது 1.5 மில்லி கிராமுக்கு குறைவாக புளூரைடு உப்பு கலந்திருந்தால் அது சரியான குடிநீர். இந்த அளவை தாண்டி புளூரைடு உப்பு குடிநீரில் சேர்ந்தால் எலும்பு நோய், பல் நோய், வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உருவாகி விடும். எனவே, புளூரைடு அளவாக கலந்த குடிநீரை அனைவரும் பருகுவது முக்கியம். பற்பசைகளில் கூட புளூரைடு அளவு பார்த்து வாங்குவது மிகவும் முக்கியம்.ஆனால், இந்தியாவில் 17 மாநிலங்களில் புளூரைடு நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி குடிநீரில் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீரில் இந்த அளவு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அளவை குறைப்பது குறித்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஐதராபாத் ஐஐடியில் உள்ள வேதியியல் பொறியியல் குழுவினர் துணை பேராசிரியர் சந்திரசேகர் சர்மா தலைமையில் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சியில் நாவல்பழ விதைகளை பொடியாக்கி புளூரைடு சதவீதம் அதிகம் உள்ள நீரில் கலந்தால், அதன் அளவை நீக்கிவிடுவதை கண்டுபிடித்துள்ளனர்.நாவல்பழ விதை பொடி கார்பன் பொருளாக பயன்படுகிறது. இதை குடிநீரில் கலந்து கொதிக்க வைத்தால், அதில் உள்ள புளூரைடு குறைந்துவிடுகிறது. இந்த முறையால் பாதுகாக்கப்பட்ட குடிநீரை அனைவரும் பயன்படுத்த முடியும் என்று பேராசிரியர் சர்மா தெரிவித்தார். தற்போது, ரம்யா ஆரகா தலைமையிலான குழுவினர், நாவல்பழ விதை பொடியை பயன்படுத்தி எந்தவகையான குடிநீர் மாசுவை போக்க முடியும் என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

ADVERTISEMENTS
டெங்கு, சிக்குன்குனியா பாதிப்பு டெல்லியில் குறைவு : உச்ச நீதிமன்றத்தில் அரசு தகவல்
12-10-2017 0:36

புதுடெல்லி: கடந்த ஆண்டைவிட சிக்குன்குனியா மற்றும் டெங்கு பாதிப்பு இந்த ஆண்டில் சற்று குறைவாகவே உள்ளது என டெல்லி அரசு, உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. திறந்தவெளியில் தேங்கும் நீரில் ஏடியஸ் மற்றும் பெண் கொசுக்கள் தங்கள் இனப்பெருக்கத்தை பெருக்கி கொண்டு, பொதுமக்களுக்கு டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டாலும், சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க நேரிடுகிறது. கடந்த 2015ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த 7 வயது சிறுவன் டெங்குவால் பாதிக்கப்பட்டபோது, அவனுக்கு 5 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தன. இதில் சிறுவன் உயிரிழக்கவே, பெற்றோரும் வேதனை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டனர். இந்த வழக்கை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதன் ஒரு பகுதியாக நேற்று நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அமர்வு முன் விசாரணை நடந்தது. அப்போது டெல்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘டெல்லியில் கடந்த ஆண்டு டெங்கு மற்றும் சிக்குனியாவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மாநகராட்சிகள் வெளியிட்ட நிலவரப்படி கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி வரை ஓர் உயிரிழப்பு உட்பட டெங்குவால் 9,633 பேரும், சிக்குனியாவால் 4,305 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை குறைந்துள்ளது. தலைநகரில் மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் அக்டோபர் 7ம் தேதி நிலவரப்படி 2,152 பேர் டெங்குவாலும் 368 பேர் சிக்குன்குனியாவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா அளவில் டெங்குவின் பாதிப்பு 8,726 பேர் என இருந்த போதிலும், இந்த மாதம் மட்டும் டெல்லியில் டெங்கு பாதிப்பு 345 பேர் மட்டுமே. இதனால் கொசுக்களால் இந்த ஆண்டு மிகப்பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை’ என்று ெதரிவித்தார்.* டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் கொசுக்களால் பரவுகின்றன.* இந்த நோய்களை கட்டுப்படுத்த மாநில அரசும் , மாநகராட்சிகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.* இது தவிர, காற்று மாசு, ஒலி மாசு போன்ற பிரச்னைகளும் டெல்லியை திணறடித்து வருகின்றன.