தினகரன் -- ஸ்பெஷல்

ரத்தசோதனை மூலம் சர்க்கரை நோயை தெரிந்து கொள்ளலாம்
22-2-2018 10:38

சர்க்கரை நோயை கண்டுபிடிப்பதற்கென தனி அறிகுறிகள் இல்லை. சர்க்கரை நோயானது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் இயக்கத்தையும் பாதிப்பதால் எவ்வகை அறிகுறிகள் வேண்டுமானாலும் காணப்படலாம். சர்க்கரை நோயை எளிதில் கண்டுபிடிக்க கூடிய ஒரு பரிசோதனை சிறுநீரில் சர்க்கரைக்காக செய்யப்படும் ஒரு பரிசோதனை ஆகும்.180மி.கிராம் சர்க்கரை அளவு கடந்தால்தான் இச்சோதனை கண்டுபிடிக்க முடியும். பரிசோதனை மிக எளிதாக இருந்தாலும் இது சர்க்கரை நோயை தொடக்க நிலையில் கண்டுபிடிக்க உதவுவது இல்லை. எனவே ரத்த சோதனை மூலம் சர்க்கரை அளவைக் கண்டுபிடிப்பது பயனுள்ளதாக இருக்கும்.ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு 100மி.லிட்டர்க்கு இவ்வளவு மி.கிராம் எனறு அளவிடப்படுகிறது. சர்க்கரை நோய் இல்லாத ஒருவருக்கு சாப்பிட்ட 2 முதல் 12 மணி வரை சர்க்கரையின் அளவு 120மி.கிராமை தாண்டக்கூடாது. சாப்பிட்ட 2 மணி நேரத்திற்குள் 180மி.கிராமை கடக்கக் கூடாது. இந்த இரண்டு அளவைக் கடந்து உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதாகக் கருதப்படும்.இவர்களை தவிர 120முதல் 180மி.கிராம் வரை சர்க்கரை உள்ளவர்களுக்கு சர்க்கரை இருந்தாலும் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். இவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றி செய்யப்படும் சோதனை (ஜிடிடி) மூலம் மிகச்சரியாக அறிந்து கொள்ளலாம். சர்க்கரை நோய் இதயம், சிறுநீரகம், கால், ரத்தஅழுத்தத்தில் பாதிப்பு, கணையம், நரம்பு, காது உள்ளிட்ட பல்வேறு அவயங்களின் செயல்பாடுகளை பாதிக்கும் தன்மை உடையது. எனவே ஒவ்வொருவரும் சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்வதுடன், உணவுப்பழக்க வழக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட தற்காப்பு முறைகளையும் கையாளுவது அவசியம்.

எண்ணை மாறாமல் வேறு மொபைல் நிறுவன சேவையைத் தொடரலாம்
22-2-2018 10:37

மொபைல் நம்பர் போர்டபிளிட்டி என்பதன் சுருக்கம்தான் எம்என்பி. இது ட்ராயால் வகுக்கப்பட்ட நுகர்வோர்க்கு ஆதரவான பல தீர்மானங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இதன்படி ஒரு மொபைல் போன்றதொரு சேவை வழங்குவோரின் சேவையில் திருப்தி இல்லையென்றால் அதே எண்ணை வைத்துக்கொண்டு வேறு மொபைல் நிறுவனத்திற்கு மாறும் முறையே எம்என்பி.ஆகும்.இதற்கு என்ன செய்ய வேண்டும்:முதலில் நீங்கள் எந்த சேவை வழங்குவோரை அணுக விரும்புகிறீர்களோ அவர்களிடம் இருந்து கஸ்டமர் அக்விசிஷன்படிவம்(சிஏஎப்) மற்றும் போர்டிங் படிவத்தைப் பெற வேண்டும். அதில் உள்ள விதிமுறைகளைப் பார்த்து அதை நிரப்ப வேண்டும். போர்டிங் படிவத்தை நிரப்ப உங்களுக்கு யுனிக் போர்டிங் கோட்(யுபிசி) தேவை. இதற்கு உங்கள் மொபைலில் இருந்து 1900 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ்.மூலம் போர்ட் என்று டைப் செய்து ஒரு சின்ன இடைவெளி விட்டு உங்கள் மொபைல் நம்பரை டைப் செய்து அனுப்ப வேண்டும். உடனே உங்களுக்கு யுபிசி.கிடைத்து விடும். இப்போது நிரப்பப்பட்ட படிவம் மற்றும் சிஏஎப்படிவம் மற்றும் தேவையான சாட்சி ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும்.புதிய சிம்கார்டை புதிய சேவை வழங்குவோரிடம் இருந்து பெற வேண்டும். நீங்கள் போர்டிங்கிற்காக ரூ.19வரை கட்டணமாக செலுத்த வேண்டி வரும். விண்ணப்பித்த 7ம் வேலைநாளிற்குள்ளாக போர்டிங் நிகழும். உங்கள் புதிய சேவை வழங்குவோர் உங்களுக்கு போர்டிங் நிகழும் தேதியையும் நேரத்தையும் தெரியப்படுத்துவார். அப்போது இரவு நேரத்தில் 2 மணி நேரம் வரை சேவை துண்டிக்கப்படும். குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்குப்பிறகு பழைய சிம்மை அகற்றிவிட்டு புதிய சிம்மை பயன்படுத்த வேண்டும். தகுதிகள், விதிமுறைகள்: ஒரு சேவை வழங்குவோரிடம் இருந்து மற்றொன்றிற்கு மாற குறைந்தபட்சம் 90நாட்கள் முதல் சேவை வழங்குவோரிடம் இணைப்பு வைத்திருக்க வேண்டும். ஒரே சேவைப் பகுதியில்தான் நீங்கள் மாற இயலும். போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் பில்தொகையை முழுவதுமாக செலுத்திவிட்டீர்களா என்று உறுதி செய்ய வேண்டும். ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் போர்டிங்கின் போது டாக்டைம் தொகை மீதம் இருந்தால் அதை இழந்து விடுவீர்கள்.

இதயத்துடிப்பில் தடங்கலை ஏற்படுத்துமா புகைபழக்கம்?
21-2-2018 10:38

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களை புகைப்பழக்கம் வெகுவாய் பாதிக்கும். புகை நுரையீரலை அடைந்ததுமே இதயம் விரைந்து செயல்பட துவங்குகிறது. நாடித்துடிப்பும் அதிகரிக்கும். சிகரெட்டில் உள்ள நிகோட்டின் என்னும் நச்சுப்பொருளே இதற்கு காரணம். ஒரு கிராம் எடை புகையிலை கொண்ட ஒவ்வொரு சிகரெட்டில் இருந்தும் ஏறத்தாழ 9 மி.கிராம் நிக்கோட்டின் பெறப்படுகிறது. பில்டர் சிகரெட் என்றாலும் மிகச்சொற்ப அளவு நிகோட்டினே இதில் வடிகட்ட முடிகிறது.நிக்கோட்டினால் இதயத்துடிப்பில் தடங்கலும், மாறுதலும் ஏற்பட்டு இதயம் சீரின்றி துடிக்க தொடங்குகிறது. இதனால் ஹார்ட் அட்டாக், மூளைத்தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும் நிகோட்டின் ரத்தத்தை ரத்தக் குழாய்க்குள்ளேயே உறைய செய்கின்ற சக்தியுடையது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களது ரத்தக்குழாய்கள் ஏற்கனவே சுருங்கி இருக்கின்ற போது ரத்தம் உறைவதால் எளிதில் அடைப்பு ஏற்படும். மேலும் நிகோட்டினானது உடலினுள் கேட்டே கொலாமின்ஸ் என்ற ரசாயனப் பொருளை அளவுக்கு அதிகமாக சுரக்க செய்கிறது. இது இதயத்துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் கூட்டும் தன்மை கொண்டது.மேலும் புகையில் உள்ள கார்பனமோனாக்சைடு ரத்தத்தில் சென்று படிகிறது. 4 முதல் 5 மடங்கு புகைப்பவர்களின் ரத்தத்தில் இந்த நச்சுவாயு அதிகம் இருக்கும். கார்பன் மோனாக்சைடு மாரடைப்பை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டது. புகைப்பழக்கம் உள்ள பலரும் இதனால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து அதை தூக்கி வீசியுள்ளனர். எனவே உங்களாலும் இப்பழக்கத்தை விட்டொழிக்க முடியும். இன்றே முயற்சி செய்யுங்கள்.

ADVERTISEMENTS
தெரிஞ்சுக்கலாம் வாங்க...!
21-2-2018 10:37

* அஞ்சலகங்களில் ஆயிரம் ரூபாய் முதல் ரூ.50 ஆயிரம் வரை உடனடி மணியார்டர் அனுப்பலாம். இத்திட்டத்தில் பணம் அனுப்பிய நாளிலேயே பட்டுவாடா செய்யப்படும். பணம் அனுப்புபவருக்கு மணியார்டர் பதிவு செய்தவுடன் 16இலக்கம் கொண்ட ஒரு ரகசிய எண் தெரிவிக்கப்படும். இதை பணம் பெறுபவருக்கு அவர் தெரிவிக்க வேண்டும். பணம் பெறுபவர் இந்த 16 இலக்க எண்ணை அதற்குரிய படிவத்தில் பூர்த்தி செய்து வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், இப்பணத்தை பெற்று கொள்ளலாம். இச்சேவை இந்தியாவில் வசிப்பவருக்கு மட்டும்தான் கிடைக்கும். சேவைக்கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சமாக ரூ.330 வரை பெறப்படுகிறது.* ரத்தத்தின் அழுத்தத்தை அளவிடுவதற்கான முயற்சியை 1733ம் ஆண்டு ஸ்டீபன் என்னும் ஆங்கிலேயர் தொடங்கினார். இந்த முயற்சிக்கு முழுவடிவம் 1905ல் நிக்கோலாய் கொரோட்கால் என்னும் ரஷ்யரால் கொடுக்கப்பட்டது. ஸ்பைக்மோ மானோமீட்டர் என்னும் ரத்த அழுத்தம் அளக்கும் கருவி உருப்பெற்று நடைமுறைக்கு வந்தது* விளாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.* பப்பாளிப் பழக்காய்களை சமைத்தும், சாம்பாரில் போட்டும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் அதிகரிக்கும்.* அன்னாசிச்சாறு அருந்துவதால் மஞ்சள்காமாலை மட்டுப்படும். ஒருடம்ளர் சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தினால் உடல் சோர்வு மறையும். * உடையாத கட்டிகளுக்கு வாழைப்பழத்தைக் குழைத்து போட கட்டி பழுத்து உடைந்து சீழ் வெளியேறிப் புண் ஆறும்.* பலாப்பழச் சுளைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும்.

கூகுளில் தமிழ்மொழிக்கு அங்கீகாரம்!
20-2-2018 12:42

இணையதளங்கள் வைத்திருப்பவர்கள் தங்கள் தளத்தில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் (Google Adsense) என்னும் இலவச சேவையை வழங்கிவருகிறது. இதுவரை சில குறிப்பிட்ட மொழிகளுக்கு மட்டுமே இருந்த இந்தச் சேவை தமிழ் மொழியில் உள்ள இணையதளங்களுக்கு கொடுக்கப்படாமல் இருந்தது. தற்போது தமிழ்மொழிக்கான கதவைத் திறந்துள்ளது கூகுள்.ஆட்சென்ஸ் என்றால் என்ன?ஆட்சென்ஸ் என்பது கூகுள் நிறுவனத்தின் விளம்பரப் பிரிவு சேவையாகும். இது நிறுவனங்கள், அல்லது தனி நபர்களின் விளம்பரங்களை நமது தளத்தில் நம் அனுமதியுடன் வைக்கும். இந்த விளம்பரங்கள் மூலம் விளம்பரதாரர்களிடமிருந்து பெறப்படும் தொகையில் 32 சதவீதத்தை கூகுள் எடுத்துக்கொண்டு 68 சதவீதத்தை நமக்குத் தந்துவிடும். உதாரணத்திற்கு உங்கள் இணையதளத்தில் வைக்கப்படும் விளம்பரம் மூலம் கூகுளுக்கு 100 டாலர் கிடைத்தால், அதிலிருந்து 68 டாலரை உங்களுக்குத் தந்துவிடும். தமிழுக்கு அங்கீகாரம்உங்கள் இணையதளத்தில் விளம்பரம் வைக்க வேண்டுமானால் ஆட்சென்ஸ் ஆதரிக்கும் மொழியில் மட்டுமே இணையதளத்தின் உள்ளடக்கம் இருக்க வேண்டும். இதுவரை ஆங்கிலம், ஹிந்தி, வங்காளம், உருது போன்ற 43 மொழிகளை மட்டுமே ஆதரித்த ஆட்சென்ஸ் தமிழ்மொழியை நெடுங்காலமாகப் புறக்கணித்துவந்தது. இதனால் தமிழில் இணையதளங்கள் வைத்திருப்பவர்கள் வருமானம் ஈட்ட முடியாமல் இருந்துவந்தது. பல வருடங்களாக இணையதள உரிமையாளர்கள் தமிழ்மொழிக்கு அங்கீகாரம் வேண்டி கூகுளிடம் கோரிக்கைகள் வைத்துவந்தனர். இதுவரை செவிசாய்க்காத கூகுள் நிறுவனம் தற்போது 44-ஆவது மொழியாகத் தமிழ்மொழியை அங்கீகரித்துள்ளது. இதன்மூலம் தமிழில் இணையதளங்கள் வைத்திருப்பவர்கள் இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு வழிவகுத்துள்ளது கூகுள் நிறுவனம்.தமிழ் இனி மெல்ல வளரும்உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி மாதத்தில் உலகின் உன்னதமொழியும், நம் தாய்மொழியுமான தமிழ்மொழிக்கு ஆட்சென்ஸ் அங்கீகாரம் கிடைத்ததைத் தமிழ் ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்கின்றனர். இந்த அறிவிப்பால் இணையத்தில் தமிழ்ப் பதிவுகள் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். இதனால் இணையத்தில் தமிழ் இனி மெல்ல வளரும்!!!அப்துல் பாஸித்

தரமான கல்விக்கு… தாய்மொழியே தீர்வு!
20-2-2018 12:41

இன்றைய உலக அரங்கில் பல நாடுகளில் உயர் பணியில் இருப்பவர்களும், பொருளாதார ஆலோசகர்களும், இந்தியாவில் படித்து அந்நாடுகளில் சிறப்பாகப் பணியாற்றிவருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் தாய்மொழி வழியில் தொடக்கக் கல்வி படித்தவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு கூடுதலாக உள்ளது. அதுபோல் இந்தியாவில் பணிபுரியும் மூத்த அறிஞர்கள் பெரும்பாலோரும் தொடக்கக் கல்வியை அவரவர் தாய்மொழியில் படித்தவர்கள்தான் என்பதில் ஐயமில்லை.தமிழ் இனிமையான மொழி, உலகத்து மூத்த மொழி, உலகுக்குப் பண்பாட்டை வழங்கிய மொழி. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று முதன்முதல் உலகிலேயே மானிடப்பற்றை வெளிப்படுத்திய மொழி. தமிழ்மொழி வாயிலாக அறிவியல், கணிதம், பொருளியல், கணிதவியல் போன்ற பாடங்கள் படித்தல் என்பதுதான் தாய்மொழிவழிக் கல்வி. கல்வியை எந்த மொழியில் கற்பித்தல் சிறந்தது என்பதைப் பற்றிய ஆராய்ச்சி சர்வதேச அளவில் சில இடங்களில் நடைபெற்றது. அமெரிக்காவில் ஆங்கிலம் பேசாத மக்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அவரவர் தாய்மொழியிலேயே கல்வி கற்பித்தல் நடைபெற்றுவருகிறது. 1967-ல் இது தொடர்பாக அமெரிக்காவில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அவர்களுக்குத் தாய்மொழி முதல்மொழியாகவும், ஆங்கிலம் இரண்டாம் மொழியாகவும் கற்பிக்கப்பட்டது. அதுவும் அந்தந்த இனத்தைச் சேர்ந்த ஆசிரியர்களைக்கொண்டு கற்பித்தல் நடைபெற்றது. அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின் கல்வி கற்றவர்களின் தரம் ஆராய்ந்து பார்க்கப்பட்டது. தாய்மொழியில் கற்பவர் விரைவில் கற்கின்றனர் என்ற உண்மை அந்த ஆய்வில் வெளிப்பட்டது.அதைப்போலவே தென்மெக்சிக்கோ நாட்டில் ஓர் ஆய்வு நிகழ்த்தப்பட்டது. அயல்மொழியில் கல்வி கற்ற குழந்தைகள், தாய்மொழியில் கல்வி கற்ற குழந்தைகள் எனத் தனித்தனியே ஆய்வு செய்யப்பட்டது. அயல்மொழியில் கல்வி கற்ற குழந்தை களைக்காட்டிலும் தாய்மொழியில் கற்ற குழந்தைகள் நன்றாகக் கல்வி கற்கின்றனர் என்னும் உண்மை புலப்பட்டது. இதேபோல உலக ஒன்றிய நாடுகளில் கல்வி, அறிவியல், பண்பாட்டுக் கழகம் ஓர் ஆராய்ச்சி செய்தது. அதன்படி அயல்மொழியில் கல்வி கற்ற குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு உடையது என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான் யுனஸ்கோ தன் கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கே முதலிடம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலக மக்கள் அனைவரும் அவரவர் தாய்மொழியில்தான் கல்வி கற்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.1951ல் யுனஸ்கோ அளித்த அறிக்கையிலேயே தாய்மொழிக் கல்வியின் தேவையைப் பற்றித் தெளிவுபடுத்தியிருந்தது. அதில்…1. The mother tongue is a person’s natural means of self expression and one of his first needs is to develop his power of self expression to the full.2. Every pupil should begin his formal education in his mother tongue.3. If the mother tongue is adequate in all respects to serve as the vehicle of university and higher technical education, it should be so used.4. In other cases, the mother tongue should be used as far as the supply of books and materials permits.5. If a child’s mother tongue is not the official language of his country or is not a world language, he needs to learn a second language.6. It is possible to acquire a good knowledge of a second language without using it as the medium of instruction for general subject.தமிழகத்தில் காலூன்றிய ஆங்கிலக் கல்வி ஆங்கிலக் கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம் ஆட்சியைப் பிடித்த ஆங்கிலேயர்களுக்காகவும், அவர்களின் ஆட்சி நிர்வாகம் செய்வதற்கான பணியாளர்களைத் தயார் செய்வதற்காகவே. தொடக்க கால ஆங்கிலவழிக் கல்வி தமிழ்வழிக் கல்வியை எந்த வகையிலும் கெடுக்கவில்லை. ஆங்காங்கே பள்ளிகள் உருவாக்கப்பட்டபோது முழுவதற்கும் தமிழே பயிற்று மொழியாக இருந்தது. தமிழகத்தில் நீதிக்கட்சி பொறுப்பேற்றபோது இளங்கலைப் பட்டப்படிப்பு வரை தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், தமிழ்ப் பாடத்தில் திருக்குறளைச் சேர்க்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சராக இருந்த அவினாசி லிங்கம் சட்டமியற்றி செயல்படவும் வைத்தார். மேலும் அவர் தமிழகத்தில் தமிழ் இல்லை, தமிழர் வீட்டில் தமிழ் இல்லை அனைவருமே தமிழை மறந்துவிடக்கூடாது என்று எண்ணித் துடித்தவருமாவார். காமராசர் முதலமைச்சராக இருந்தபோது கல்வித்துறையில் அமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் கலையியலில் முதுகலைப் படிப்பு வரை தமிழைப் பயிற்று மொழியாக்கினார். பட்ட மேற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி போன்றவை குறைந்த அளவில் ஆங்கில மொழி வாயிலாகக் கற்பிக்கப்பட்டன. பள்ளிகள் அளவில் ஆங்கிலப் பயிற்றுமொழி புகவில்லை. சில தனியார் பள்ளிகள் மேட்டுக்குடி மக்களுக்காக மட்டும் சில இடங்களில் இயங்கின.கல்வியியல் அறிஞர்களுள் இந்தியாவிற்கு ஏற்ற தொழில் அடிப்படைக் கல்விக் கொள்கையைச் சொன்னவர் காந்தியடிகள். அவர் தாய்மொழிவழிக் கல்வியைப் பெரிதும் வற்புறுத்தினார். ஆங்கில வழிக் கல்வியை வன்மையாகக் கண்டித்தார். கண்டித்ததோடு நிற்காமல் பல மாநிலத்தவருக்கு நூல் நூற்றலைக் கற்பித்தபோது, அவர்களின் தாய்மொழியைக் கற்று, அவர்களின் மொழியிலேயே பாடம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம், விண்வெளி ஆராய்ச்சியாளர் மயில்சாமி அண்ணாதுரை போன்ற அனைவரும் தமிழ் போதனா மொழியாகப் படித்தவர்களே என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. ஆனால் தற்போது தமிழ்வழிக் கல்வி மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது நம் அனைவரது கடமை. அதனால், அரசியல் கட்சிகள் அனைவரிடமும் தமிழ்வழிக் கல்வியை முழுமையாகச் செயல்படுத்துவோம் என்று அவர்களின் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வற்புறுத்துங்கள். மேலும், எந்த ஓர் இனமும் அதன் தாய்மொழி மூலமே முன்னேற முடியும் என்பதை இன்றைய ஆங்கில நாடுகளும், ஜப்பான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் உணர்த்துகின்றன. இந்த நாடுகளில் மருத்துவம், தொழில்நுட்பம் போன்றவை இன்றும் அவர்களின் தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகின்றன. அவர்களின் நாட்டில் உருவாக்கப்படும் பொருள் எதுவாக இருந்தாலும் அவர்களின் தாய்மொழியில்தான் பெயர் வைக்கிறார்கள். பல மொழிகள் கண்ட பாரதியாரும் கூட அதனால்தான் தமிழின் சிறப்பை யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்;பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்?தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் - என்று பாடினார்.தமிழைப் போதனா மொழியாகக் கொண்டு 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அரசு வேலை. பிற போதனா மொழிகளில் படித்த தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் தூய தமிழ் 2ஆம் நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு மாநிலத்தில் பேசப்படும் மொழி மட்டும்தான் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் போதனா மொழியாக இருக்க வேண்டும் என்பது போன்ற தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டால்தான் தாய்மொழிவழிக் கல்வி காப்பாற்றப்படும்... தரமான கல்வி கொடுக்கப்படும்!

ADVERTISEMENTS
அச்சில் ஏற்றப்பட்ட முதல் மொழி நம் தமிழ்மொழி!
20-2-2018 12:40

தொன்மை வாய்ந்த மொழி நம் தமிழ் மொழி. ஆனாலும் தமிழ் மொழி ஓலைச்சுவடி, செப்பேடு மற்றும் கல்வெட்டு ஆகியவற்றில் மட்டுமே எழுத்து வடிவில் இருந்தது. ஆனால், முதல் தமிழ்ப் புத்தகம் 1554ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் லிசுபனில் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும் தோமா த குருசு ஆகியோர் ஆவர். இம்மூவரும் தமிழ் அறிந்த இந்தியர்களே என்றும் அவர்களுடைய கிறித்தவப் பெயர்களே நமக்குத் தெரிந்துள்ளன என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.கார்த்தீயா ஏங் லிங்குவா தமுல் எ போர்த்துகேஸ் (Cartilha lingoa Tamul e Portugues) (தமிழில்: “தமிழ் மொழியிலும் போர்த்துக்கீசியத்திலும் அமைந்த ‘திருமறைச் சிற்றேடு’ என்னும் தலைப்பில் வெளியான அந்நூலில் தமிழ்ச் சொற்கள் லத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோக்கப்பட்டிருந்தன. இந்த நூல்தான் வரலாற்றிலேயே முதலில் அச்சேற்றப் பட்ட தமிழ்நூல்; ஐரோப்பிய மொழியிலிருந்து முதலில் மொழிபெயர்ப்பான தொடர் பாடம்; இந்திய மொழியொன்றிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு எழுத்துமாற்றம் செய்யப்பட்ட முதல்நூல் என்று தமிழறிஞர் கமில் சுவலெபில் குறிப்பிட்டிருந்தபோதும் அச்சில் ஏற்றி அழகு பார்த்த பெருமை போர்ச்சுக்கல் நாட்டின் எவோரா மாவட்டத்தில் விகோசா கிராமத்தில் பிறந்த ஹென்றி என்றிகஸ் அடிகளார் அல்லது ஹென்றி ஹென்றிக்கஸ் அடிகளார் என அழைக்கப்பட்ட கத்தோலிக்கப் பாதிரியாரையே சாரும்.பிரான்சிஸ்கன் சபைக் குருக்களால் முத்துக்குளித்துறை மீனவ மக்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதால் சிறப்பாகப் பணியாற்ற ஹென்றி ஹென்றிக்கஸ் அடிகளார் தமிழ் கற்க ஆரம்பித்தார். இவர் வேம்பார் பரிசுத்த ஆவி ஆலயப் பங்குத் தந்தையாகப் பணிபுரிந்தபோதுதான் தமிழ் கற்றார். இதனை அவரே தன் கைப்பட 31.10.1558-ல் ரோம் நகருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வேம்பாரில் முதன்முதலில் பரிசுத்த ஆவி ஆலயம் எழுப்பிய ஹென்றி ஹென்றிக்கஸ் அடிகளார்தான் தமிழில் முதன்முதலில் நூல் அச்சிட்டவர் என்றும் சொல்லப்படுகிறது. தமிழ் மொழி அச்சு எழுத்துகள் முதன் முதலில் கோவாவில் தான் கி.பி 1577 ல் உருவாக்கப்பட்டன. ஆனால், அந்த எழுத்துகளால் என்ன அச்சிடப்பட்டது என்பது பற்றிய தகவல் இல்லை.ஆனால் அதன்பின்னர் 1578-ல் கொல்லத்தில் உலோகத்தினாலான தமிழ் அச்சு எழுத்துகள் வார்க்கப்பட்டன. இவற்றைக்கொண்டு ஹென்றி ஹென்றிக்கஸ் அடிகளார் 16 பக்கங்கள் கொண்ட ‘தம்பிரான் வணக்கம்’ என்ற கிறிஸ்தவ மறை வழிபாடு தொடர்பான நூலை 20.10.1578ல் அச்சிட்டு வெளியிட்டார். இந்நூல்தான் இந்திய மொழிகளிலேயே முதன்முதலில் அச்சில் ஏற்றப்பட்ட பெருமைக்குரியது. இந்த ‘தம்பிரான் வணக்கம்’ நூலின் முகப்பில் ‘கொம்பஞ்ஞிய தெ சேசு வகையில் அண்ரிக்கப் பாதிரியார் பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம்’ என்று பழந்தமிழில் தலைப்பு காணப்படுகிறது. இதை ‘இயேசு சபை பாதிரியார் ெஹன்றிக்கஸ் மொழிபெயர்த்த நூலான தம்பிரான் வணக்கம்’ எனக் கொள்ள வேண்டுமெனக் கூறுகிறார்கள்.கிறிஸ்தவப் போதகர்களுக்கு உபயோகப்படும் விதத்தில் கிறிஸ்தவ திருமண ஜெபங்கள் வழிபாட்டு முறைகள் 18 பிரிவுகளாகத் தமிழிலும் ஆங்காங்கே போர்த்துக்கீசிய மொழி விளக்கச் சொற்களுடனும் கூடிய இந்நூலின் ஒரே பிரதி இப்போது அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தாய்மொழியே தலை நிமிர்வு!
20-2-2018 12:39

மொழி மனிதனின் சிறந்த அடையாளம் என்பதுடன் மனித உணர்வை வெளிப்படுத்தும் சிறந்த கருவியாகும். மனிதனின் எண்ணம், சொல், செயல் ஆகியனவற்றை நெறிப்படுத்தி வெளிப்படுத்தும் கருவியே மொழியாகும். மனிதனின் சிந்தனையாற்றல் அவனின் தாய்மொழியைச் சார்ந்தே உள்ளது. பல மொழிகளைக் கற்றுக்கொண்டாலும் மனிதனின் சுயசிந்தனைக்குத் தாய்மொழியே அடிப்படையாகும். ஒவ்வொரு இனக்குழுவும், தமக்கென்று தனித்த மொழியையும் பண்பாட்டையும் கொண்டு இயங்குகின்றது. ஒவ்வொரு இனக்குழுவிற்கும் மொழியே முகமாகவும் முகவரியாகவும் விளங்குகிறது. மேலும், தாய்மொழியே மனிதனின் சிந்தனை உணர்வுகளைக் கிளர்வுறச் செய்து இயங்கவைக்கிறது. சிறந்த ஆளுமைப் பண்புள்ளவர்களை உருவாக்குவதில் மொழி பெரும் பங்கு வகிக்கிறது.பிற மொழியில் பெறும் எந்த ஒரு புதிய தகவலையும் உள்வாங்கிக்கொள்ளும் மூளை தாய்மொழி வழியாகவே பொருள் புரிதலை உருவாக்கும். இத்தகைய மூளையின் இரட்டை வேலையைத் தவிர்க்கவும் நேரடியாகவே தாய்மொழியில் கற்கவும், எழுதவும் கற்றுக்கொள்ளும்போது மனிதனால் அவ்வேலையை எளிதாகச் செய்யமுடியும் என்பதால்தான் கல்வியாளர்கள் மற்றும் மொழியியல் அறிஞர்கள் குழந்தைகளுக்குத் தாய்மொழிவழிக் கல்வியை வழங்க வலியுறுத்துகின்றனர். கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றல் போன்றவை கல்வியறிவினால் மட்டும் வருவதல்ல. அது தாய்மொழியுணர்வுடன் தொடர்புடையதாகும். எனவேதான், தாய்மொழிவழிக் கல்வி பயிலும் பிற ஐரோப்பிய சமூகக் கல்விச் சூழலில் சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், இன்னபிற சாதனையாளர்கள் எளிதில் உருவாகும் சூழல் உள்ளது. படிப்பாளிகளை மட்டுமே உருவாக்கும் பிறமொழி ஆதிக்கம் நிலவும் கல்விச் சூழலில் படைப்பாளர்களையும் கண்டுபிடிப்பாளர்களையும் உருவாக்குவதில் சிக்கல்கள் உள்ளன.கற்பதற்கும் கேட்டு உணர்வதற்கும் எளிதான தாய்மொழி யிலேயே அனைத்தும் கிடைத்துவிட்டால் மனிதனுக்கு அதைவிட வேறு இன்பம் இருக்கமுடியாது. கல்வி, தொழில், கலை இலக்கியம், வழிபாடு என்னும் வாழ்க்கைமுறையின் அனைத்துக்கூறுகளையும் அவரவருக்கு, அவரவரின் தாய்மொழியிலேயே கிடைக்கும்படி செய்துவிட்டால் அதைவிடச் சிறந்த பேறு இல்லை. ஆனால், தாய்மொழியில் கல்வியோ வேலைவாய்ப்போ வாழ்வியல் சூழலோ அமையாதபோது அத்தகைய வாழ்க்கைச் சூழல் செயற்கைத்தன்மையுள்ள வாழ்க்கையாக மாறிவிடும். இயல்பான சூழலில் வாழாமல் செயற்கைத்தன்மையுள்ள வாழ்க்கைச் சூழலில் வாழும் மனிதனால் சுதந்திரமாகச் சிந்திக்கவும், செயல்படவும் முடியாது. மனிதனின் சிந்தனையை, செயல்பாட்டை முடக்கிவிட்டால் அவனுக்கு வெறும் உடலளவிலான சுதந்திரம் மட்டுமே மிஞ்சும். எண்ணங்களையும் கருத்துகளையும் சுதந்திரமாகச் சிந்தித்து வெளிப்படுத்த இயலாத வாழ்க்கை சிறைவாழ்க்கையாகும். தமிழகத்தில் தமிழ் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகம் என்றாலும் செயல்திறனும், ஊக்கமுடன் செயல்படும் திறன்மிகுந்த இளைஞர்களையும் காண்பது அரிதாகிவிட்டது. அது அவர்களின் குற்றமன்று. பண்பாட்டோடு தொடர்பற்ற வேற்று மொழியில் கற்பவர்களிடம் மனப்பாடம் செய்யும் உணர்வைத் தவிர வேறு எதனை எதிர்ப்பார்க்க முடியும்?மொழி அழிந்ததால் முகவரியைத் தொலைத்து சிதைந்து அழிந்த இனங்கள் அதிகம். எனவேதான், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய மனோன்மணியம் சுந்தரனார் “ஆரியம் போல் உலகவழக்கு அழிந்து ஒழிந்து சிதையா -உன்சீரிளமைத்திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே” என வாழ்த்துகிறார்.உலகில் செம்மாந்திருந்த கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, எபிரேயம் போன்ற மொழிகள் போல் அழிந்துவிடாமல், தமிழ் இன்று அறிவியல் தமிழாய்ப் புதிய அவதாரம் எடுத்து நாளும் வளர்ந்துவருகிறது. தமிழர்களின் பண்பாட்டில் கலந்துவரும் வேற்றுமொழி ஆதிக்கத்தால் “மெல்ல தமிழ் இனிச்சாகும்” என்னும் குரல் கேட்கத் தொடங்கியிருக்கிறது. கல்வி மற்றும் வணிகத்திற்கு ஆங்கிலம், வழிபாட்டிற்குச் சமஸ்கிருதம், இசைத்துறைக்குத் தெலுங்கு எனத் தமிழர்தம் வாழ்க்கையைப் பிற மொழிகள் ஆக்கிரமித்திருக்கும் சூழல் மாறவேண்டும் என்று விரும்பிய பாவேந்தர் பாரதிதாசன் “தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை” என மனம் கொதித்துப் பாடினார். இனக்கலப்பும் மொழிக்கலப்பும் தவிர்க்க இயலாதவை. எனினும் கணினியில் கோலோச்சும் நம் தமிழ் ஆட்சிமொழி, அலுவலகமொழி, வணிகமொழி, வழிபாட்டுமொழி, வழக்காடு மொழி, அறிவியல் தொழில்நுட்ப மொழி என்று அனைத்து நிலைகளிலும் அரியணை ஏறும் போதுதான் அதன் எதிர்காலம் சிறக்கும். ஒற்றைமொழி ஆதிக்கம் என்பது இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் விடப்படும் சவாலாகும். பன்மைத்துவம் கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாடு சிதைவுறாமல் இருக்க இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக அங்கீகரிப்பதுடன் அந்தந்த மொழி பேசும் மக்களுடன் அவர்கள் தாய்மொழியிலேயே மத்திய, மாநில அரசுகள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். பழந்திராவிடர்களான நாகர்கள் இந்திய நிலப்பரப்பெங்கும் பரவியிருந்தனர். அவர்கள் பேசிய மொழி பழந்தமிழ் மொழி ஆகும். எனவே தான் நாகர்கள் பேசிய தமிழ்மொழியே இந்தியாவின் ஆட்சிமொழியாய் வரவேண்டும் என அரசியல் நிர்ணய சட்டசபையில் அம்பேத்கரும், காயிதேமில்லத்தும் வலியுறுத்தினர். உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த வரலாற்றுச் சிறப்புடைய, தமிழ்நாட்டு மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போர் இந்தியாவின் அனைத்து மாநில மக்களின் மொழி உரிமையை மீட்டுத் தந்த போராகும். மொழி என்பது வெறும் உரையாடலுக்கான கருவி அல்ல. அது உரத்து முழங்கும் அதிகாரம். எனவேதான், இந்தி எதிர்ப்புப் போரின்போது பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் நேரு “இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும்வரை ஆங்கிலமே தொடர்புமொழியாக இருக்கும்” என்று வாக்குறுதி அளித்தார். ஒற்றைமொழி ஆதிக்கம் ஒருமைப்பாட்டைச் சிதைத்து ஒற்றுமையைக் குலைத்துவிடும் என்பதால் செம்மொழியாம் தமிழ்மொழிக்கும் ஆட்சிமொழித் தகுதியை இந்திய அரசு வழங்கிடவேண்டும். தமிழ் நாட்டு மாணவர்களுக்குச் செந்தமிழில் படித்திடவும் செழுந்தமிழில் தொழில் மேற்கொள்ளவும் வாய்ப்புகள் வளமாக அமைந்தால் இந்தியாவின் ஜனநாயகம் வலிமையாகும்.ஒவ்வொரு மொழி பேசுவோரின் தனித்தன்மையையும் பண்பாட்டு அடையாளங்களையும் காப்பாற்றுவது மட்டுமே இந்தியாவின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும். இன்றளவும், பேச்சுவழக்கில் மட்டுமே உள்ள பழங்குடியினரின் பாரம்பரியமான மொழிகளுக்கும் எழுத்துருக்களை உருவாக்கி அவர்களின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்கவும் வளர்த்தெடுக்கவும் அரசு முன்வரவேண்டும். மொழிச் சிறுபான்மையினரின் மொழி உணர்வுகள் பாதுகாக்கப்படவேண்டும். அத்துடன் அண்மைக்காலத்தில் வழக்கொழிந்த இந்திய மொழிகளுக்கும் உயிரூட்டி “இந்தியா என்பது தேசிய இனங்களின் அருங்காட்சியகம்” என்பதை நிலைநாட்டிட வேண்டும்.

தாய்மொழியைச் சுவாசியுங்கள்!
20-2-2018 12:38

மனித சமூகத்தில் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளவும், உலக அளவில் தொடர்புகொள்ளவும் மொழி பெரிதும் பயன்படுகிறது. உலகம், நாடு, மாநிலம், மாவட்டம் என வேறுபட்ட பகுதிகளில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. ஆனாலும் ஒவ்வொருவரின் தனித்தன்மையையும், பண்பாட்டையும் இனத்தின் அடையாளத்தையும் பாதுகாக்கும் நோக்கம் தாய்மொழி பேணுதலில்தான் அடங்கியுள்ளது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் உலகில் 7000-த்தில் இன்று 3000 மொழிகள் மட்டுமே வழக்கில் உள்ளன. இவற்றுள் 1500 மொழிகளை 1000 பேருக்குக் கீழும், 3000 மொழிகளை 10,000 பேருக்குக் கீழும் பேசிவருகின்றனர். மூத்த மொழியான நம் தமிழை உலகில் 7 கோடி பேர் பேசுகின்றனர். உலக அளவில் 94 நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சிமொழியாகவே உள்ளது. காலத்திற்கேற்பப் புதுப்பித்துக்கொள்ளாத மொழிகள் அழிந்துகொண்டிருக்கின்றன. மாதத்திற்கு ஒரு மொழி அழிந்து வருகிறது. ஆனால், என்றும் உள்ளதென் தமிழோ சீரிளமை குன்றாமல் திகழ்கிறது. தன்னேரிலாத் தமிழின் இலக்கணமும் கணிப்பொறிக்குரிய கணிதத்தன்மையும் ஒத்துப்போகலாம். வளர்ந்துவரும் அறிவியல் உலகில் தமிழும் கணிப்பொறியும் மிகவும் அவசியமாகிவிடும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.ஆனால், நடைமுறையில் உள்ள நிகழ்வுகள் வேறாக உள்ளன. ஆங்கிலம் உட்பட பிறமொழிப் பற்றினால் சொந்த மொழி மறப்பு அதிகமாகிவருகிறது. பள்ளிகளில் தமிழ் பேசத் தடை விதிக்கப்படுகிறது. பெற்றோரும் மேற்கத்திய நாகரிக மோகத்தினால் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் பேச வேண்டுமென விரும்புகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தமிழ் தவிர்த்து ஏனைய மொழி பேசுவதை உயர்வாகக் கருது கின்றனர். இவ்வாறு தமிழைப் புறக்கணிப்பது நம் மூல அடையாளத்தையே இழப்பதற்குச் சமமாகும்.மொழி வளர்ச்சிக்கல்விஅறிவு வளர்ச்சிக்குத் தாய்மொழிக் கல்வியே மிகவும் அவசியம் என்பதே அறிஞர் பெருமக்களின் கருத்து. தொழில் வளர்ச்சி கண்ட சீனா, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி, கொரியா, கியூபா ஆகிய நாடுகளில் தாய்மொழி வாயிலாகத்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. தாய்மொழிவழிக் கல்வி தேவையா என்ற விவாதமே தேவையற்றது. இது ‘பெற்ற தாய் வேண்டுமா? மாற்றாந்தாய் வேண்டுமா?’ என்று விவாதிப்பது போலாகும்.நம் தாய்மொழியான தமிழின் சிறப்பால் ஈர்க்கப்பட்ட அயல்நாட்டு மேதைகளும், அறிஞர்களும் பலருண்டு. ‘தாய் என்ற உறவும் தமிழ் மொழியும் உயிரைப் பெற்ற இரு வடிவங்கள்’ என்பார் ஜெர்மானிய அறிஞர் மார்க்ஸ் முல்லர். தமிழின் ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்ட ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர், சீகன் பால்கு அய்யர், ராபர்ட், நொபிலி போன்றோர் தமிழ் கற்று இலக்கிய இலக்கண நூல்கள் படைத்தனர். தாய்மொழி மீதான பற்றின் காரணமாகத்தான் மகாத்மா காந்தி தன் சுயசரிதையான சத்திய சோதனையை குஜராத்தியிலும், இரவீந்திரநாத் தாகூர் கீதாஞ்சலியை வங்கமொழியிலும் எழுதினர் என்பது குறிபிடத்தக்கது. இந்தியாவின் மாநிலங்களான மேற்கு வங்காளம், குஜராத், கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில்கூட அவர்களுடைய மாநிலமொழியைக் கற்காமல் மேற்படிப்பைப் படிக்க முடியாது. ஆனால், செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் பேசும் நம் தமிழ்நாட்டில் அடிப்படைத் தமிழ் இலக்கணம் தெரியாதவர் கூட முனைவர் பட்டத்தைப் பெற்றுவிட முடியும் என்ற நிலை வருத்தத்துக்குரியது.தமிழைச் சிறப்பிப்போம்ஒரு மொழி அழிந்தால் அதன் பண்பாடு, கலாசாரம், இலக்கியம், நாகரிகம் அழிந்துவிடும். தாய்மொழியானது தாய்க்கு நிகராகும். மொழியை அழிப்பது தாய்க்குச் செய்யும் துரோகம் ஆகும். ‘தாய்மொழியைச் சுவாசியுங்கள்; பிறமொழியை நேசியுங்கள்’ என்றார் தேசியக் கவிஞர் குரவம்பு. ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்குங் காணோம்’ என்றார் பாரதி. ‘தமிழுக்கு அமுதென்று பேர்; அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்றார் பாரதிதாசன். ‘இருந்தமிழே உன்னால் இருந்தேன்; வானோர் விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன்’ என்றது தமிழ்விடு தூது. ‘லெமூரியாக் கண்டத்தில் தோன்றியதுதான் முதல் மக்களினம். அவர்கள் பேசிய மொழியே தமிழ்’ என்றார் பரிதிமாற்கலைஞர். இவ்வாறெல்லாம் புகழ்பெற்ற தமிழ்மொழி பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மறுக்கப்படுவதும், மறைக்கப்படுவதும் துடைக்கப்பட வேண்டும். மேலும் உலகமெலாம் பரவி நின்று வாழும் தமிழர் நமது அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் தொலைக்காமல் இருக்கத் தாய்மொழியான தமிழைக் கற்று உரையாடி, தமிழை வளர்ப்போமாக!

ADVERTISEMENTS
மாணவர்கள் போராட்டத்தால் பிறந்தது உலக தாய்மொழி தினம்
20-2-2018 12:36

நம்மில் பலர் சலிப்புடன் ‘‘ஏங்க இந்த காலத்துல தமிழ வச்சுக்கிட்டு என்ன பண்றது''. வட இந்தியாவுல பாருங்க எல்லாம் இந்திதான்... இங்கிலாந்துல, அமெரிக்காவுல பாருங்க எல்லாம் இங்கிலீஷ்தான். நாமதான் இன்னும் தமிழ்... தமிழ்னு தொங்கிகிட்டு இருக்கோம்'' என்றெல்லாம் பேசுவது வாடிக்கையாகிவிட்டன. அப்படிப் பேசுபவர்களில் பலருக்கு அந்தந்த மாநிலங்களில், நாடுகளில் அவரவர் தாய்மொழியில்தான் படிப்பார்கள் என்ற அடிப்படை ஞானம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆள்வோரின் மொழியை ஆதரிப்பதும், படிப்பதும் அது அடிமைப் புத்தியின் அடையாளம் மட்டும்தான். அறிவின் அடையாளம் கிடையாது. உலகின் ஆகசிறந்த உன்னத அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் தாய்மொழிகளில் படித்தவர்கள் ஆய்ந்து கண்டுபிடித்ததுதான்.இந்த நாகரிக காலத்தில் ‘மொழி... கிழினு சொல்லிட்டு’ என்பவர்களுக்குத் தெரியாது நாகரிகத்தின் தொட்டில்களாக விளங்கும் மேற்கத்திய நாடுகள் பலவும் தாய்மொழி காக்க பிரிந்தவை.... சில இன்றும் போராடிக் கொண்டிருப்பவை என்று. அதற்கு மதம் கூட தடையாக இருந்ததில்லை என்பதுதான் உலக தாய்மொழி தினத்தின் வரலாறு. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவான ஒருங்கிணைந்த இந்தியா, 1947ல் இந்திய யூனியன், பாகிஸ்தான் என 2 நாடுகளாகப் பிரிந்தன. மத அடிப்படையில் பிரிந்த பாகிஸ்தான், கிழக்குப் பாகிஸ்தான், மேற்குப் பாகிஸ்தான் என இரண்டு தனித் தனி நிலப்பரப்புகளைக் கொண்டது. கிழக்குப் பாகிஸ்தானை விட மேற்குப் பாகிஸ்தானின் நிலப்பரப்பு, மக்கள் தொகை அதிகம். அங்கு உருதுமொழி பேசுபவர்கள் தான் பெரும்பான்மை. அதற்கு மாறாக இருந்த கிழக்குப் பாகிஸ்தான் பகுதியின் மொழி வங்காளம் மட்டுமே.ஆங்கிலேயர்கள் நிர்வாகம் செய்ய 1905ல் வங்காளத்தை மேற்கு, கிழக்கு என இரண்டு பகுதிகளாகப் பிரித்துவைத்திருந்தனர். அதில் கிழக்கு வங்கம்தான் பின்னர் கிழக்கு பாகிஸ்தான் ஆனது. பாகிஸ்தான் தலைநகர், நிர்வாகம் எல்லாம் மேற்குப் பாகிஸ்தானில் இருந்தது. அதிகாரத்தில் இருப்பவர்களின் மொழிதான் ஆட்சிமொழி என்ற அதிகார வர்க்கத்தின் தத்துவம் அன்றும் அமலானது. அதனால் ‘உருது... உருது மட்டுமே பாகிஸ்தானின் ஆட்சி, தேசியமொழி’ என அறிவித்தார் பாகிஸ்தான் தந்தை என்று போற்றப்பட்ட முகம்மது அலி ஜின்னா.அது மட்டுமல்ல பாகிஸ்தான் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் ஆட்சிமொழியான உருதுவில் மட்டும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் கொந்தளித்த வங்காளிகள் தங்கள் மொழிக்கும் உரிமை கேட்டு போராட ஆரம்பித்தனர். அதுவும் நாடு சுதந்திரமடைந்த 4 மாதங்களில், 8.12.1947ம் தேதி முதல் டாகாவில் போராட்டங்கள் வெடித்தன. மொழி உரிமை காக்கத் தொடர்ந்த போராட்டங்களால் கொதித்துப்போன ஜின்னா 11.3.1948ம் தேதி டாகா விரைந்தார். போய்ச் சேர்ந்தது முதல் 28.3.1948ம் தேதி மீண்டும் மேற்குப் பாகிஸ்தானில் உள்ள கராச்சி திரும்பும் வரை, ‘உருது... உருது மட்டும்தான் இஸ்லாமிய நாட்டின் தேசியமொழி’ என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.அதுமட்டுமல்ல டாகா பல்கலைக்கழகத்தில் பேசும்போது, ‘உருது மொழிக்கு எதிராகப் போராடுபவர்கள் தேசத் துரோகிகள். உருது மட்டும்தான் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது’ என்று முழங்கினார். அதனால் எரிச்சலான டாகா பல்கலைக்கழக மாணவர்களும், அரசியல் ஆர்வலர்களும், ‘வங்காளத்தையும் ஆட்சி மொழி ஆக்க வேண்டும்’ என்று கோரி வீதிக்கு வந்து போராட ஆரம்பித்தனர். அதைப் பாகிஸ்தானின் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. மாறாகப் போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டியது. இந்நிலையில் 1952ம் ஆண்டு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது மத்திய அரசு. வங்காளிகள் கொதித்தனர். ‘வங்காள மொழியை உருது, அரேபிய எழுத்துகளைப் பயன்படுத்தி எழுத அனுமதிக்கப்படும்’ என்ற அறிவிப்புதான் அதற்குக் காரணம். வங்காளத்தில் அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசிய மத்திய அரசின் ‘ராஷ்டிர பாஷா கோர்மி பரிஷத்’தும் 31.1.1952ம் தேதி அதனை உறுதிப்படுத்தியது. இதில் வேடிக்கை என்னவென்றால், இத்தனைக்கும் அப்போது பாகிஸ்தானை ஆண்ட கவாஜா நஜிமுதீன் கிழக்குப் பாகிஸ்தானில் பிறந்தவர். டாகா நவாபு வம்சத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் அவரும் உருதுதான் என்பதில் உறுதியாக இருந்தார். காரணம், அவரின் தாய்மொழி உருது.காட்டிக் கொடுப்பவர்களைக் கண்டுகொள்ளாத மாணவர்களும் அரசியல் கட்சியினரும் உடனடியாகக் கூடி 21.2.1952ம் தேதியைப் போராட்டத்திற்கான நாளாக முடிவு செய்தனர். அதனால் அதிர்ந்த மத்திய அரசு தாய்மொழி காக்க களமிறங்கியவர்களைக் கைது செய்ய ஆரம்பித்தது. மேலும் 144(பாகிஸ்தானிலும் ஆங்கிலேயர் வகுத்த சட்டங்கள்தான்) தடை உத்தரவு போட்டது. ஆனால், இந்தக் கெடுபிடிக்கு அஞ்சாமல் பிப்ரவரி 21ம் தேதி மாணவர்கள்மற்றும் அரசியல் கட்சியினர் டாகா பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி வளாகங்களில் திரண்டனர். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் திணறியது காவல்துறை. மத்திய அரசின் உத்தரவுக்குப் பிறகு மாணவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. மாணவர்கள் அப்துல் சலாம், ரபீக் உதீன் அகமது, அப்துல் பர்கத், அப்துல் ஜாபர் உட்பட பலர் உயிரிழந்தனர்.மாணவர்கள் கொல்லப்பட்டதால் போராட்டங்கள் தீவிரமடைந்தன. பொதுமக்களும் களமிறங்கினர். தினந்தோறும் தொடர்ந்த போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை மட்டுமல்ல... பாகிஸ்தான் வருவாயும் பாதிக்கப்பட்டது. காரணம் கிழக்குப் பாகிஸ்தானில் கிடைத்த பெரும்பான்மை வருவாய் மூலமாகத்தான் பாகிஸ்தான் மத்திய அரசே நடந்துகொண்டிருந்தது. அதனால் அப்போது ராணுவ ஆட்சி நடத்திய பாகிஸ்தான் அதிபர் அயூப்கான் 1956ம் ஆண்டு வங்காள மக்களுடன் உடன்பாட்டுக்கு வந்தார். அதன்படி வங்காள மொழியும் பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.அந்த அறிவிப்பு பேருக்குத்தான் இருந்தது. மத்திய அரசு வேலைகளில், பதவிகளில் வங்காளிகளைப் புறக்கணிப்பது தொடர்ந்தது. மாநில அரசுப் பணிகளிலும் மேற்குப் பாகிஸ்தான் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டன. அதனால் மொழியால் ஏற்பட்ட போராட்டம் 1971ம் ஆண்டு கிழக்கு, மேற்குப் பாகிஸ்தான்களுக்கு இடையிலான போராக மாறியது. அந்நிய நாட்டு பிரச்னை என்று பார்க்காமல் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் இருந்த வங்காளிகள் கிழக்குப் பாகிஸ்தான் மக்களுக்காகப் போராடினர். அதனால் அந்த மாநில முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே, ‘மத்திய அரசு பாகிஸ்தான் மீது படையெடுக்காவிட்டால்.... மாநில போலீசாரை சண்டைக்கு அனுப்புவேன்’ என்று எச்சரிக்கை விடுத்தார். அதன்பிறகு இந்திய அரசு பாகிஸ்தான் மீது படையெடுத்ததும், வென்றதால் வங்காள தேசம் என்ற நாடு உருவானதும் வரலாறு. தங்கள் மொழி நசுக்கப்படுவதால் ஏற்பட்ட போராட்டம் தனி நாடு உருவாக வித்திட்டது. தங்கள் மதத்தை விட தாய்மொழிதான் உயர்ந்தது என்று வங்காள முஸ்லீம்கள் வரலாறு படைத்தனர். ஒரே நாடு, ஒரே மொழி என்பவர்கள் இதனைக் கவனத்தில் கொள்வது நல்லது. இந்நிலையில் உலகில் மொழிகள் அழிந்து வருவதைத் தடுக்கவும், தாய்மொழிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ‘உலக தாய்மொழி தினம்’ கடைப்பிடிக்க ஐக்கியநாடுகள் சபை 1999ம் ஆண்டு முடிவு செய்தது. அதற்கான நாளைத் தேர்வு செய்ய விவாதங்கள் நடந்தன. வங்காளதேசம் தாய்மொழிப்போரில் தங்கள் மாணவர்கள், மக்களின் தியாகத்தை எடுத்துச் சொல்லி பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவிக்க வலியுறுத்தியது.அதனை ஏற்ற ஐநா சபை ‘தாய்மொழியைக் காக்க போராடியதால் வங்காளிகள் கொல்லப்பட்ட பிப்ரவரி21ம் தேதி உலக தாய்மொழி நாளாக கடைப்பிடிக்கப்படும்’ என்று அறிவித்தது. அதன்பிறகு 2000ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி21ம் தேதி உலக தாய் மொழி தினமாகக் கொண்டாடப்படுகிறது.பின்னுக்குத் தள்ளப்பட்ட தமிழர்கள் தியாகம்!வங்காளிகள் தங்கள் தாய்மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்வதற்கு முன்பு 1930களிலேயே சென்னை நடராசன் முதன்முதலாக உயிர் தியாகம் செய்தார். அதன்பின்னர் தமிழ்மொழியைக் காக்க மேலும் பலர் இன்னுயிர் ஈந்துள்ளனர். ஆனால், அந்த வரலாறுகள் உலகமறியச் செய்யத் தவறியதால், மொழிக்காகப் போராட்டக் களத்தில் முன்னுக்கு நின்ற தமிழர்களின் தியாகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அதேநேரத்தில் மதங்களை விட தாய்மொழியைப் போற்றும், அதற்காகத் தியாகம் செய்தவர்களை மதிக்கும் வங்காளிகள் என்றும் போற்றுதலுக்கு உரியவர்கள்.