தினகரன் -- விளையாட்டு

விளையாட்டு துளிகள்
23-2-2018 0:54

* இந்தியா, இலங்கை, வங்கதேசம் இடையேயான நிதாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 தொடர் அடுத்த மாதம் 6ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான இலங்கை அணியிலிருந்து அசேலா குணரத்னே நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. வலது கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக குணரத்னே அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ், பந்துவீச்சாளர் மதுசான்கா, குஷால் பெரேரா ஆகியோரும் காயம் காரணமாக சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.* ஆல்ரவுண்டராக பார்க்கப்படுவது ஹர்திக் பாண்டியா செய்த அதிர்ஷ்டம். அவர் பேட்டிங்கில் எந்த விதத்திலும் அணிக்கு கைகொடுப்பதில்லை. பந்துவீச்சிலும் மந்தமாகவே செயல்படுகிறார். அப்படியிருந்தும் ஆல் ரவுண்டர் என்ற வகையில் அணியில் தொடர்ந்து இடம் பிடிக்கிறார். தயவுசெய்து அவரை கபில்தேவுடன் ஒப்பிட வேண்டாம். கபில்தேவ் இந்திய அணியில் இடம் பெறும் முன்பாக, முதல் தர போட்டிகளில் சதம் விளாசியிருக்கிறார். ஆனால் ஹர்திக் முதல் தர போட்டியில் பெரிய அளவில் பேட் செய்ததில்லை’’ என இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ரோஜர் பின்னி கூறி உள்ளார்.* பாகிஸ்தானில் உள்ளூர் கிளப் அணிகளுக்கு இடையேயான பாகிஸ்தான் சூப்பர் லீக் சீசன் 3 தொடர் துபாயில் நேற்று தொடங்கியது. முதல் லீக் போட்டியில், பெஷாவர் ஜால்மி, முல்தான் சுல்தான்ஸ் அணிகள் மோதின. முல்தான் சுல்தான்ஸ் முதல் முறையாக இத்தொடரில் களமிறங்குகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் மோதுகின்றன. மொத்தம் 34 போட்டிகள் நடக்கின்றன. இறுதிப் போட்டி மார்ச் 25ம் தேதி நடக்கிறது.

பவுலரின் தலையில் பட்டு சிக்சருக்கு பறந்த பந்து
23-2-2018 0:53

ஆக்லாந்து: நியூசிலாந்து உள்ளூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பேட்ஸ்மேன் அடித்த பந்து பவுலரின் தலையில் பட்டு சிக்சருக்கு பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நியூசிலாந்தில் உள்ளூர் அணிகள் மோதும் போர்ட் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் நடக்கிறது. இதில், குவாலிபயர்-2 போட்டியில் ஆக்லாந்து, கேன்டர்பரி அணிகள் மோதின. முதலில் பேட் செய்தஆக்லாந்து அணியில் துவக்க வீரர் ஜீத் ரவல் அதிரடியாக ரன் குவித்துக் கொண்டிருந்தார். சுழற்பந்து வீச்சாளர் ஆன்ட்ரு எல்லீஸ் வீசிய பந்தை ரவல் விளாசினார். அப்போது புயல் வேகத்தில் வந்த பந்து, எல்லீசின் தலையில் பலமாக பட்டு நேராக பவுண்டரி எல்லைக்கு பறந்து சிக்சர் ஆனது. அதிர்ஷ்டவசமாக எல்லீசுக்கு பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை. இதனால், களத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இப்போட்டியில் ஆக்லாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 304 ரன் குவித்தது. ரவல் 149 ரன் எடுத்து எல்லீஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆடிய கேன்டர்பரி அணி 37.2 ஓவரில் 197 ரன்னில் சுருண்டு தோற்றது. ஆக்லாந்து அணி பைனலுக்கு முன்னேறியது.

துபாய் டூட்டி ப்ரீ டென்னிஸ் கோன்டாவை போராடி வென்றார் கசட்கினா
23-2-2018 0:53

துபாய்: துபாய் டூட்டி ப்ரீ டென்னிஸ் தொடரில் ஜோகன்னா கோன்டாவை போராடி வென்ற கசட்கினா கால் இறுதிக்கு முன்னேறினார். துபாயில் நடக்கும் இத்தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிப் போட்டிகள் நேற்று நடந்தன. இதில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, ஜப்பானின் ஒசாகாவை எதிர்த்து விளையாடினார். அபாரமாக ஆடிய ஸ்விடோலினா 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதியில், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 6-4, 6-3 என்ற செட்களில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்விடோலினா-கெர்பர் அரை இறுதியில் மோதுகின்றனர். முன்னதாக நடந்த கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இங்கிலாந்தின் ஜோகன்னா கோன்டா, ரஷ்யாவின் கசட்கினாவை எதிர்த்து விளையாடினார். முதல் செட்டில் 6-4 என வென்ற கோன்டா, 2வது செட்டில் மேட்ச் பாயின்ட்டையும் எட்டினார். அந்த கட்டத்தில் தளராமல் போராடிய கசட்கினா 7-6 என்ற கணக்கில் 2வது செட்டை கைப்பற்றி, விறுவிறுப்பான 3வது செட்டில் 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 4-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்ற கசட்கினா கால் இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்பெயினின் முகுருசா 6-3, 7-5 என்ற செட்களில் அமெரிக்காவின் பெல்லிசை வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

ADVERTISEMENTS
விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் அரை இறுதியில் ஆந்திரா: டெல்லி படுதோல்வி
23-2-2018 0:52

புதுடெல்லி: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரில் டெல்லியை துவம்சம் செய்த ஆந்திரா அரை இறுதிக்கு முன்னேறியது. டெல்லியில் நேற்று நடந்த கால் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆந்திரா அணி பீல்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் துவ்வரப்பு சிவக்குமாரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் டெல்லி அணி தடுமாறியது. துவக்க வீரர்கள் உன்முக்த் சந்த் (4), தலால் (11) விக்கெட்டை வீழ்த்திய சிவக்குமார், அனுபவ வீரரான கவுதம் கம்பீரையும் (8) பெவிலினுக்கு அனுப்பி வைத்தார்.ஓரளவுக்கு தாக்கு பிடித்து ரன் சேர்த்த டெல்லியின் ஒரே நம்பிக்கையாக இருந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டையும் சிவக்குமார் விட்டு வைக்கவில்லை. அதிகபட்சமாக ரிஷப் பன்ட் 38 ரன் சேர்த்தார். ஷோரே (21), கேப்டன் இஷாந்த் ஷர்மா (1), சைனி (2) ஆகியோரை பார்கவ் பட் வெளியேற்றினார். இதனால் டெல்லி அணி 32.1 ஓவரில் 111 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக பந்துவீசிய சிவக்குமார் 4, பார்கவ் பட் 3, ஐயப்பா 2, நரேன் ரெட்டி 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய ஆந்திரா அணி 28.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதிகபட்சமாக அஷ்வின் ஹப்பார் 38 ரன் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் ஆந்திரா அரை இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு கால் இறுதியில், பரோடா, சவுராஷ்டிரா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பரோடா அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சோயப் தாய் 72*, குருணல் பாண்டியா 61 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா அணி 48.4 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன் எடுத்து வென்றது. அதிகபட்சமாக பரோட் 82 ரன் எடுத்தார்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டி20ல் வருண பகவானால் தோற்றோம்: காரணம் சொல்கிறார் கேப்டன் கோஹ்லி
23-2-2018 0:51

செஞ்சூரியன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்து 189 ரன் குவித்த போதிலும், வருண பகவான் தங்கள் வெற்றியை பறித்து விட்டதாக கேப்டன் விராட் கோஹ்லி கூறி உள்ளார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், 2வது போட்டி செஞ்சூரியனில் நேற்று முன்தினம் நடந்தது. இந்திய அணி முதலில் பேட் செய்தது. டாலா வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே ரோகித் ஷர்மா கோல்டன் டக் ஆகி வெளியேறினார். ரெய்னா 31, தவான் 24 ரன் எடுத்தனர். கேப்டன் கோஹ்லி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 90 ரன்னில் 4 விக்கெட் பறிபோன நிலையில், மணீஷ் பாண்டே, டோனி ஜோடி சேர்ந்து, தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். மணீஷ் பாண்டே 33 பந்தில் அரைசதம் அடித்தார். ஆரம்பத்தில் அமைதியாக ஆடிய டோனி கடைசி கட்டத்தில் பவுண்டரி, சிக்சர்களை விளாசி 27 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்க்க இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது. மணீஷ் பாண்டே 79 ரன் (48 பந்து, 3 சிக்சர், 6 பவுண்டரி), டோனி 52 ரன் (28 பந்து, 3 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.கடின இலக்கை சேஸ் செய்த தென் ஆப்ரிக்க அணி 18.4 ஓவரில் 4 இழப்புக்கு 189 ரன் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது பெற்ற கிளாசன் 30 பந்தில் 69 ரன்களை விளாசினார். இதில், 7 சிக்சர், 3 பவுண்டரி அடங்கும். டுமினி 40 பந்தில் 64 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியின்பந்துவீச்சு மிக மோசமாக இருந்தது. சாஹல் (4 ஓவர், 64 ரன்), உனாத்கட் (3.4 ஓவர், 42 ரன்) அறிமுக வீரர் சர்துல் தாகூர் (4 ஓவர், 31 ரன்), ஹர்திக் பாண்டியா (4 ஓவர், 31 ரன்) என அனைவருமே ரன்களை வாரி வழங்கினர். தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறியிருப்பதாவது: ஆரம்பத்தில் விரைவாக விக்கெட் இழந்ததால், அதிகபட்சம் 175 ரன்னை எட்டுவோம் என எதிர்பார்த்தோம். ஆனால் மணீஷ் பாண்டே, டோனி மிகச்சிறப்பாக பேட் செய்து, அணியின் ஸ்கோரை 188 ஆக உயர்த்தினர். இது நிச்சயம் வெற்றி பெறக்கூடிய இலக்கு தான். ஆனால் வருண பகவான் எங்களை ஏமாற்றிவிட்டார். தூறல் மழை தொடர்ச்சியாக பெய்தது, நமது பந்துவீச்சாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டது. தூறல் காரணமாக பந்தின் பிடிமானம் நழுவும். இந்த சூழ்நிலையில் பந்துவீசுவது மிகவும் கடினம். எனவே, வெற்றி பெறக்கூடிய போட்டி கைநழுவிப்போனது. அதே நேரத்தில் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள். கிளாசன், டுமினி நேர்மறை எண்ணத்துடன் விளையாடி வெற்றியை வசப்படுத்தினர். இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்களே. இவ்வாறு கோஹ்லி கூறினார். இதன் மூலம் தொடர் 1-1 என்ற சமநிலையை அடைந்துள்ளது. தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி கேப்டவுனில் நாளை (இந்திய நேரப்படி இரவு 9.30 மணி) நடக்கிறது.சாஹலை புரட்டி எடுத்த கிளாசன்இந்திய அணியின் பிரம்மாஸ்திரமாக மாறிக் கொண்டிருப்பதாக கருதப்படும் சாஹல், செஞ்சூரியனில் ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக மாறினார். 4 ஓவர் வீசிய இவர் 64 ரன்களை கொடுத்தார். டி20 வரலாற்றில் இந்திய பந்துவீச்சாளர் கொடுத்த அதிகபட்ச ரன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகி உள்ளார். இதற்கு முன் 2007ல் இங்கிலாந்துக்கு எதிராக ஜோகிந்தர் ஷர்மா 57 ரன் கொடுத்துள்ளார். சர்வதேச அளவில் 3வது இடத்தையும் சாஹல் பிடித்துள்ளார். இவரது ஓவரில் மட்டும் 7 சிக்சர் அடிக்கப்பட்டுள்ளது. இதுவும், டி20 வரலாற்றில், இந்தியாவின் முதல் பவுலர் ரகம்தான். இதற்கு முன் ரவீந்திர ஜடேஜா 6 சிக்சர்களை அள்ளிக் கொடுத்துள்ளார். குறிப்பாக, சாஹலை தென் ஆப்ரிக்காவின் கிளாசன் புரட்டி எடுத்தார். சாஹலின் 12 பந்தை சந்தித்த கிளாசன் 41 ரன் விளாசி இருக்கிறார். இதுவும் டி20 வரலாற்றில் இந்திய பவுலரின் பந்துவீச்சில் ஒரே பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன்னாகும். இதில் 5 சிக்சர், 1 பவுண்டரியும் அடங்கும். டக் அவுட்டில் சாதனைஒருநாள் கிரிக்கெட்டில் எதிரணிக்கு மிகவும் டேஞ்சரான பேட்ஸ்மேன்களில் ஒருவரான இந்திய அணி துவக்க வீரர் ரோகித் ஷர்மா, டி20ல் ‘டக்’ அவுட் ஆவதில் சாதனை படைத்திருக்கிறார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இவர் முதல் பந்திலேயே டக் அவுட்டானார். டி20ல் ரோகித் டக் அவுட்டாவது இது நான்காவது முறையாகும். இதன் மூலம் அதிக டக் அவுட்டான இந்திய வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகி உள்ளார். முன்னாள் வீரர் ஆசிஷ் நெஹ்ரா, யூசுப் பதான் ஆகியோர் 3 டக் அவுட்டுடன் 2வது இடத்தில் உள்ளனர்.தென் ஆப்ரிக்க தொடர் முழுவதும் ரோகித்தின் செயல்பாடு சிறப்பாக இல்லை. போர்ட் எலிசபெத்தில் நடந்த 5வது ஒருநாள் போட்டியில் மட்டும் சதம் அடித்துள்ளார். மற்றபடி, எஞ்சிய 5 ஒருநாள் போட்டியில் சேர்த்து 55 ரன் மட்டுமே எடுத்துள்ளார். டெஸ்டில் 4 இன்னிங்சில் 78 ரன் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மயாங்க் அகர்வால் 140, சமர்த் 125 ரன் விளாசல் விஜய் ஹசாரே டிராபி அரை இறுதியில் கர்நாடகா: ஐதராபாத் ஏமாற்றம்
22-2-2018 5:57

புதுடெல்லி: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் கால் இறுதியில், கர்நாடகா அணி 103 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. டெல்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற கர்நாடகா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக மயாங்க் அகர்வால், கேப்டன் கருண் நாயர் களமிறங்கினர். கருண் 10 ரன் எடுத்து முகமது சிராஜ் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து அகர்வாலுடன் ரவிகுமார் சமர்த் இணைந்தார். அபாரமாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர்.இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 242 ரன் சேர்த்தது. மயாங்க் அகர்வால் 140 ரன் (111 பந்து, 12 பவுண்டரி, 7 சிக்சர்), சமர்த் 125 ரன் (124 பந்து, 13 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தனர். கவுதம் 20, தேஷ்பாண்டே 19 ரன் எடுக்க, பின்னி 5, கவுதம் 0, அரவிந்த் 3 ரன்னில் பெவிலியன் திரும்பினர். கர்நாடகா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 347 ரன் குவித்தது. கோபால் 11, பிரதீப் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் முகமது சிராஜ் 10 ஓவரில் 59 ரன் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். ரவி கிரண் 2, ரவி தேஜா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 348 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ரோகித் ராயுடு 28 ரன், அக்‌ஷத் ரெட்டி 10 ரன்னில் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த ரவி தேஜா 53 ரன் எடுத்த நிலையில் (57 பந்து, 9 பவுண்டரி) ரன் அவுட்டானது ஐதராபாத் அணிக்கு பின்னடைவை கொடுத்தது.இந்த நிலையில், சந்தீப் - கேப்டன் அம்பாதி ராயுடு ஜோடி 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி 98 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. சந்தீப் 42 ரன், ராயுடு 64 ரன் (62 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஷ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, ஐதராபாத் போராட்டம் முடிவுக்கு வந்தது. தியாகராஜன் 20 ரன் எடுக்க, பின் வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.ஐதராபாத் அணி 42.5 ஓவரில் 244 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கர்நாடகா பந்துவீச்சில் ஷ்ரேயாஸ் கோபால் 6.5 ஓவரில் 31 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். ஸ்டூவர்ட் பின்னி 3, பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட் வீழ்த்தினர். கர்நாடக அணி 103 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. மகாராஷ்டிராவிடம் வீழ்ந்தது மும்பை:விஜய் ஹசாரே டிராபியில் நேற்று நடந்த 2வது கால் இறுதியில் மும்பை - மகாராஷ்டிரா அணிகள் மோதின. டெல்லி, பாலம் ஏ மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வெனு பேட் செய்த மும்பை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்தது. தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா 14, கேப்டன் ஆதித்யா தாரே 16 ரன்னில் வெளியேற, சித்தேஷ் லாட் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். ஓரளவு தாக்குப்பிடித்த ஷ்ரேயாஸ் அய்யர் 35 ரன், சூரியகுமார் யாதவ் 69 ரன் (88 பந்து, 7 பவுண்டரி), ஷாம்ஸ் முலானி 22, ராஞ்ஜனே 18, துருமில் மத்கர் 11, துபே 4 ரன்னில் ஆட்டமிழந்தனர்.தவால் குல்கர்னி 23 ரன், ஷிவம் மல்கோத்ரா 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மகாராஷ்டிரா பந்துவீச்சில் பிரதீப் தாதே 3, பிரஷாந்த் கோர் 2, சங்க்லேச்சா, பச்சாவ், ஹிம்கனேகர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய மகாராஷ்டிரா 46.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து அபாரமாக வென்றது. ருதுராஜ் கெயிக்வாட் 12, காந்த் முந்தே 70 ரன் (95 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ராகுல் திரிபாதி 49 ரன் (73 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். அங்கித் பாவ்னே 37 ரன், நவுஷத் ஷேக் 51 ரன்னுடன் (40 பந்து, 5 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினர். நேற்று நடந்த முதல் 2 கால் இறுதி ஆட்டங்களில் வென்ற கர்நாடகா, மகாராஷ்டிரா அணிகள் அரை இறுயில் மோதவுள்ளன. இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் பரோடா - சவுராஷ்டிரா (களம்: பெரோஸ் ஷா கோட்லா), ஆந்திரா - டெல்லி (களம்: பாலம் ஏ மைதானம்) அணிகள் கைகலக்கின்றன. அரை இறுதி ஆட்டங்கள் 24, 25 தேதிகளிலும், இறுதிப் போட்டி 27ம் தேதியும் நடைபெற உள்ளன.

ADVERTISEMENTS
இந்தியா - தென் ஆப்ரிக்கா மகளிர் டி20 4வது ஆட்டம் மழையால் பாதிப்பு
22-2-2018 5:57

செஞ்சுரியன்: இந்தியா - தென் ஆப்ரிக்கா மகளிர் அணிகளிடையே நடந்த 4வது டி20 போட்டி, கனமழை காரணமாக முடிவு இல்லாமல் கைவிடப்பட்டது. செஞ்சுரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்க அணி தொடக்க வீராங்கனைகள் லிஸெல் லீ, கேப்டன் வான் நியகெர்க் இருவரும் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவரில் 103 ரன் சேர்த்தனர். நியகெர்க் 55 ரன் (47 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி தீப்தி ஷர்மா பந்துவீச்சில் ருமேலி தார் வசம் பிடிபட்டார்.அடுத்து வந்த குளோ டிரையன் 2 ரன், சுனே லுவஸ் 5 ரன்னில் வெளியேறினர். தென் ஆப்ரிக்கா 15.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்த நிலையில், கனமழை கொட்டியதால் ஆட்டம் தடைபட்டது. லிஸெல் லீ 58 ரன் (38 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்), டு பிரீஸ் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கொண்டு ஆட்டம் தொடர முடியாததால், முடிவு இல்லாத போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 5வது மற்றும் கடைசி டி20 போட்டி கேப் டவுன், நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.செஞ்சுரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நேற்று மகளிர் டி20 போட்டி மழை காரணமாக முடிவு இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில், இதே மைதானத்தில் இந்தியா - தென் ஆப்ரிக்கா ஆண்கள் அணிகள் மோதும் 2வது டி20 போட்டியும் (இரவு ஆட்டம், இந்திய நேரப்படி இரவு 9.30க்கு தொடக்கம்) நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் கால் இறுதியில் பிளிஸ்கோவா
22-2-2018 5:56

துபாய்: துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் ஸ்பெயினின் கர்லா சுவாரெஸ் நவரோவுடன் நேற்று மோதிய பிளிஸ்கோவா 5-7 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். எனினும், அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 5-7, 6-2, 6-4 என்ற செட் கனக்கில் கர்லா சுவாரெசை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 2 நிமிடத்துக்கு நீடித்தது.மற்றொரு 2வது சுற்றில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் இத்தாலி வீராங்கனை சாரா எர்ரானியை எளிதாக வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி, 4 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா தனது 2வது சுற்றில் 6-2, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் அனெட் கோன்டாவெய்ட்டை (எஸ்டோனியா) வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

முத்தரப்பு டி20 தொடர் ஆஸ்திரேலியா சாம்பியன்
22-2-2018 5:55

ஆக்லாந்து: முத்தரப்பு டி20 தொடரின் பைனலில் நியூசிலாந்து அணியை டி/எல் விதிப்படி 19 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில், டாசில் வென்று பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்தது. கப்தில் 21, கோலின் மன்றோ 29 ரன் (14 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ராஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 43 ரன் (38 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாச, மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினர். ஆஸி. பந்துவீச்சில் ஆஷ்டன் ஏகார் 4 ஓவரில் 27 ரன் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ரிச்சர்ட்சன், டை தலா 2, ஸ்டான்லேக், ஸ்டாய்னிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 14.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்த நிலையில், கனமழை கொட்டியதால் ஆட்டம் தடைபட்டது. கேப்டன் டேவிட் வார்னர் 25 ரன், டார்சி ஷார்ட் 50 ரன் (30 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), ஏகார் 2 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். மேக்ஸ்வெல் 20, பிஞ்ச் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கொண்டு ஆட்டம் நடைபெற வாய்ப்பு இல்லாத நிலையில், டக்வொர்த்/ லூயிஸ் விதிப்படி ஆஸ்திரேலியா 19 ரன் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. டி/எல் விதிப்படி 14.4 ஓவரில் ஆஸி. அணி 103 ரன் எடுத்திருந்தாலே போதுமானது.இந்த தொடரில் தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலிய அணி டிரான்ஸ் - டாஸ்மேன் டி20 டிராபியை கைப்பற்றியது. ஆஷ்டன் ஏகார் ஆட்ட நாயகன் விருது, கிளென் மேக்ஸ்வெல் தொடர் நாயகன் விருது பெற்றனர்.

ADVERTISEMENTS
செத்துப் பிழைத்தேன்...
22-2-2018 5:55

‘பிரசவத்தின்போது பிரச்னை ஏற்பட்டதால் அவசர அறுவை சிகிச்சை செய்துகொள்ள நேரிட்டது. அப்போது நுரையீரலில் ரத்தம் உறைந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மரணத்தின் விளிம்புக்கே சென்றுவிட்டேன். செத்துப் பிழைத்தேன் என்று தான் கூற வேண்டும். ஒரு வார காலம் எதையுமே உறுதியாக சொல்ல முடியாத இக்கட்டான நிலை இருந்தது. ரத்தக் கட்டிகளை அகற்ற மீண்டும் அறுவை சிகிச்சை செய்தார்கள். இருமல் வந்ததால் வயிற்றில் போடப்பட்ட தையல் பிரிந்து சிக்கல் அதிகரித்தது. குணமாகி வீடு திரும்பிய பிறகும் 6 வாரத்துக்கு படுத்த படுக்கையாகக் கிடந்தேன்’ என்று டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) தெரிவித்துள்ளார்.