தினகரன் -- தமிழகம்

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
23-2-2018 1:24

மும்பை: மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு, சிறிய ரக விமானங்கள் தயாரிக்க 35,000 கோடி ஒப்பந்தத்தை மகாராஷ்டிர அரசு அளித்துள்ளது. மும்பையை சேர்ந்தவர் அமோல் யாதவ். தனியார் விமான நிறுவனத்தில் மூத்த விமானியாக பணியாற்றியவர். விமானங்கள் தயாரிப்பதிலும் இவருக்கு அதீத ஆர்வம் உண்டு. மும்பையில் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு மாடியில் விமானம் தயாரிப்பதாக கூறிவந்த இவர். உண்மையிலேயே அதை சாதித்து காட்டினார். லிப்ட் வசதி இல்லாத நிலையிலும், விமான இயந்திரம் உள்ளிட்டவற்றை மாடிக்கு தூக்கிச்சென்று தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டார். 13 ஆயிரம் கி.மீ. உயரம் வரை பறக்கக்கூடிய சிறிய ரக விமானத்தை தயாரித்தார். தர்ஸ்ட் ஏர்கிராப்ட் பெயரில் நிறுவனத்தை உருவாக்கி விமான தயாரிப்பில் ஈடுபட்டார். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் அவருக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தது. இதற்கு இந்திய விமான போக்குவரத்து துறையும் இந்த விமானம் வானில் பறக்க அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் உலக முதலீட்டாளர் மாநாடு நடந்தது. இதில், சிறிய அளவிலான விமானத்தை தயாரித்து வழங்க மகாராஷ்டிர அரசு 35,000 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இதற்காக, தொழிற்சாலை அமைக்க மும்பை அருகே பால்கர் மாவட்டத்தில் 157 ஏக்கர் நிலத்தை இவரது திரஸ்ட் ஏர்கிராப்ட் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு சுமார் 19 பேர் பயணிக்கும் வகையில் 1,300 சிறிய ரக விமானங்கள் தயாரிக்கப்படும் எனவும், இதனால் சுமார் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ஜிடிபியில் 15%: ஆக்ஸ்பார்ம் அறிக்கை
23-2-2018 1:24

புதுடெல்லி: ஏழைகள் மேலும் மேலும் ஏழைகள் ஆவதாகவும் இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாக உள்ளதாகவும் ஆக்ஸ்பார்ம் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ம் என்ற சர்வதேச அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் உள்ள 1 சதவீத கோடீஸ்வரர்களிடம் நாட்டில் உள்ள 73 சதவீத சொத்துக்கள் குவிந்துள்ளதாக தெரிவித்திருந்தது. அப்போது இந்தியாவில் 101 கோடீஸ்வரர்கள் இருந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது `இந்தியாவில் அதிகரித்து வரும் சமமின்மை அறிக்கை 2018’ என்ற தலைப்பில் அந்த அமைப்பு ஆய்வு செய்தது. இதில் வருமானம், சொத்துமதிப்பு, நுகர்வு ஆகியவற்றை அளவாக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு அடிப்படையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 15 சதவீதம், இந்திய கோடீஸ்வரர்களின் சொத்தாக உள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 10 சதவீதமாக இருந்தது. தற்போது ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகிறார்கள். அடுத்தடுத்து ஆட்சி செய்து வரும் அரசுகளின் ஒரு தலைபட்சமான கொள்கைகளே இந்த சரிவுக்கு காரணம். ஒரு தலைபட்சமான அரசின் கொள்கைளால் தொழிலாளர்களை விட மூலதனத்துக்கு சாதமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிக்கையை தயார் செய்த பேராசிரியர் ஹிமன்சு இதுகுறித்து கூறுகையில், `இந்தியாவில் நிலவும் இந்த பொருளாதார சமமில்லா நிலை ஏற்கனவே நிலவி வரும் சாதி, மதம், பாலின பிரச்சனைகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ள இந்தியர்களை அதிகமாக பாதிக்கும்’ என தெரிவித்துள்ளார்.

மும்பையில் 240 கோடிக்கு 4 வீடுகள் வாங்கிய தொழிலதிபர்: சதுர அடி 1.2 லட்சம்
23-2-2018 1:24

மும்பை: மும்பையில் தொழிலதிபர் குடும்பம் ஒன்று நேபியன் ஸீ ரோட்டில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் 240 கோடிக்கு 4 வீடுகளை விலைக்கு வாங்கி இருக்கிறது. சமீப காலத்தில் நடந்த மிகப்பெரிய வீடு விற்பனை பரிவர்த்தனையாக இது பார்க்கப்படுகிறது. தென் மும்பை, நேபியன் ஸீ ரோட்டில் 35 அடுக்குகள் கொண்ட ‘தி ரெசிடென்ஸ்’ என்ற சொகுசு குடியிருப்பு கட்டிடத்தை ரன்வால் குரூப் நிறுவனம் கட்டி வருகிறது. இந்த கட்டிடத்தின் 28வது மற்றும் 31வது மாடிகளில் உள்ள நான்கு வீடுகளை 240 கோடிக்கு தொழிலதிபரான தபாரியா குடும்பம் வாங்கி இருக்கிறது. கடந்த மாதம் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த விலையின்படி பார்த்தால் இந்த வீடுகள் சதுர அடிக்கு 1.2 லட்சம் என்ற விலையில் வாங்கப்பட்டுள்ளது. இதுதான் சமீப காலத்தில் நடந்த மிகப்பெரிய வீடு விற்பனை பரிவர்த்தனையாக பார்க்கப்படுகிறது. தபாரியா குடும்பத்தினர் ஒரு சமயத்தில் ‘ஃபேமி கேர்’ என்ற கருத்தடை சாதனம் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிறுவனத்தை 4,600 கோடிக்கு விற்பனை செய்து விட்டனர். மும்பையில் அதிக வருமான வரி செலுத்தும் குடும்பமாகவும் தபாரியா குடும்பத்தினர் இருந்து வருகிறார்கள். தபாரியா குடும்பத்தினர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாந்த்ரா-குர்லா காம்ப்ளெக்சில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் ஒரு சொகுசு வீட்டை 60 கோடி விலையில் வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENTS
சீன தடையால் கழிவுபஞ்சு விலை சரிவு
23-2-2018 1:24

கோவை: கழிவு பஞ்சு ஏற்றுமதி பாதிப்படைந்ததால், உள்நாட்டில் இதன் விலை கிலோவிற்கு 17 வரை சரிவடைந்து, கிலோ 78க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட நூற்பாலைகளில் தூய பஞ்சு மூலம் நூல் உற்பத்தியாகிறது. அப்போது வெளியேறும் 20 சதவீத கழிவு பஞ்சுகளை நூற்பாலைகள் சீனாவிற்கும், உள்நாட்டில் கரன்சி நோட்டு தயாரிக்கும் காகித ஆலைகளுக்கும், தமிழகத்தில் விசைத்தறி துணி உற்பத்திக்கு தேவையான நூல் உற்பத்தி செய்யும் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களுக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த ஜனவரி 14க்கு முன்பு வரை ஒரு கிலோ கழிவு பஞ்சு ₹93க்கு விற்றனர். பின்னர் ஒரு மாதத்திற்கு மேலாக கடந்த 18ம் தேதி வரை 83க்கு விற்றனர். இந்நிலையில், இதன் விலை கடந்த 4 நாட்களாக 76 முதல் 78 வரை விற்று வருகின்றனர். கடந்த ஒன்றரை மாதத்தில் கிலோவிற்கு 15 முதல் 17 வரை குறைத்துள்ளனர்.கடந்த 2 மாதமாக சீனாவில் கழிவு பொருள்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளதால், நம்நாட்டில் இருந்து கழிவு பஞ்சு ஏற்றுமதி பாதிக்கப்பட்டு தேக்கமடைந்தது. நம் நாட்டில் கரன்சி நோட்டு தயாரிக்க கழிவு பஞ்சு கொள்முதல் செய்து வந்த காகித ஆலைகளும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தங்களது தேவையை நிறுத்தி கொண்டனர். இதனால் கழிவு பஞ்சுகள் தேக்கமடைந்து, விலை சரிவடைய காரணமாகியுள்ளது. கழிவு பஞ்சு விலை சரிவிற்கு முன்பு வரை, அதன் விலை உயர்வால் தமிழகத்தில் உள்ள ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள், தமிழகத்தில் கழிவு பஞ்சு கொள்முதலை தவிர்த்து, பிற மாநிலங்களில் கொள்முதல் செய்து வந்தனர். தற்போது விலை சரிவடைந்துள்ளதால், தமிழகத்தில் கொள்முதல் செய்ய துவங்கியுள்ளனர். இது குறித்து ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம் (ஓஸ்மா) தலைவர் ஜெயபால் கூறுகையில், சீனாவில் கழிவு பஞ்சு இறக்குமதிக்கு தடை விதித்ததால், நம்நாடு மட்டுமல்ல பங்களாதேஷ், வியட்நாம் ஆகிய நாடுகளிலும் கழிவு பஞ்சு தேக்கமடைந்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் கழிவு பஞ்சு விலை சரிவடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கழிவு பஞ்சு விலை தொடர்ந்து சரியும். கிலோ 70 வரை சரியும் என்று எதிர்பார்க்கிறோம்.’ என்றார்.

சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டம் வீடு, நகை வாங்க வைக்க பரிசு தருவதும் மோசடிதான்: 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை உண்டு
23-2-2018 1:24

புதுடெல்லி: ரியல் எஸ்டேட், நகை விற்பனையாளர்கள் அறிவிக்கும் நிச்சய பரிசுகளையும் மோசடி நிதி திட்டங்களாக கருதி தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சாரதா உள்ளிட்ட பல்வேறு நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் பணத்தை வாங்கி பல கோடி ஏப்பம் விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய நிறுவனங்களின் மோசடிகள் வெளியில் வந்து பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தின. இதை தொடர்ந்து இத்தகைய நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. சில நிறுவனங்களின் மீதான வழக்குகள் இன்னமும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அதிர்ச்சி மற்றும் இழப்பீடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் இன்னமும் மீளவில்லை. இந்நிலையில், ரியல் எஸ்டேட், நகை விற்பனையாளர்கள் அறிவிக்கும் கவர்ச்சித்திட்டங்களுக்கும் ஆபத்து வர இருக்கிறது. முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்ட தடை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதன்படி நிதி டெபாசிட் பெறும் முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்தும் சம்பந்தப்பட்ட அமைப்பிடம் பதிவு செய்வதை கட்டாயம் ஆக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விதிகள் சட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன. இதுமட்டுமின்றி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பல தாங்கள் கட்டியுள்ள வீடுகளை விற்க கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிடுகின்றன. குடியிருப்பை கையில் ஒப்படைக்கும் வரை 12 முதல் 14 சதவீத நிச்சய கேஷ்பேக்குகள் போன்றவை இதில் அடங்கும். இதுபோல் சில ஜூவல்லரி நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் சீட்டு சேரும்போது 11 தவணைகள் கட்டினால் 12வது தவணையை நிறுவனமே ஏற்கும் எனவும், இதற்கு நகையை வாங்கிக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கின்றன. சிலர் 10 மாதங்களுக்கு முதலீடு செய்து தங்களது மாதாந்திர தவணையில் 50 முதல் 60 சதவீதம் தள்ளுபடி தருவதாக கூறுகின்றனர். இதுபோன்ற திட்டங்களுக்கு கிடுக்கிப்பிடி வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாடிக்கையாளர்களை கவர அளிக்கும் இத்தகைய டெபாசிட் திட்டங்கள் வரைமுறைப்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. சில முதலீட்டாளர்கள் துவக்கத்தில் தவணையை நிறுவனங்களே செலுத்துவதாகவும் அதன்பிறகு நிறுத்தி விடுவதாகவும் புகார் கூறுகின்றனர். குறிப்பாக மேற்கு வங்கம், வங்கதேசம், ஒடிசா, ஜார்கண்ட், நொய்டா பகுதிகளில் ஏழை மக்கள் பலர் இதனால் பாதிக்கப்பட்டு புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இத்தகைய மோசடிகளை தடுக்க, பதிவு செய்யப்படாத இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவோருக்கு 7 ஆண்டுவரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்படும். சட்டத்தில் உள்ள ஓட்டைகள் அடைக்கும் வகையில் விதிகள் கடுமையாக்கப்படும் என்றார்.

பாகிஸ்தான், அல்ஜீரியாவை விட 4ஜி வேகம் இந்தியாவில் மோசம்
23-2-2018 1:24

புதுடெல்லி: இந்தியாவில் 4ஜி வேகம் படு மோசமாக உள்ளதாக இணைய நிறுவன புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும், ரிலையன்ஸ் நிறுவனம் இலவச சலுகை அளித்த பிறகு 4ஜி பயன்பாடு படுவேகமாக வளர்ந்துள்ளது. உலக அளவில் இணைய வேகம் பற்றிய புள்ளி விவரத்தை தனியார் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. ஓபன் சிக்னல் என்ற நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில். 4ஜி வேகம் உலக அளவில் சிங்கப்பூரில் அதிகமாக உ்ளளது. இங்கு சராசரி வேகம் 44 எம்பிபிஎஸ். இதற்கு அடுத்த இடங்கில் நெதர்லாந்து (42 எம்பிபிஎஸ்), நார்வே (41), தென்ெகாரியா (40), ஹங்கேரி (39) என உள்ளது. 88 நாடுகள் பட்டியலில் இந்தியா சராசரி வேகம் 6 எம்பிபிஎஸ் என கடைசி இடத்தில் உள்ளது.ஆனால் அண்டை நாடான பாகிஸ்தானில் இந்த சராசரி வேகம் 14 எம்.பி.பிஎஸ்ஆகவும், அல்ஜீரியா 9 எம்பிபிஎஸ் எனவும் உள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் 4ஜி பயன்பாடு அதிகரித்து வரும் நிலையிலும், அதற்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதே இந்தியாவில் வேகம் குறைவாக உள்ளதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை 38 லட்சம் பயன்பாட்டாளர்களிடம் இருந்து பகிரப்பட்ட தகவல்களில் அடிப்படையில் திரட்டப்பட்டுள்ளது என ஆய்வு மேற்ெகாண்ட நிறுவனம் கூறியுள்ளது.

ADVERTISEMENTS
நம்பரை மாற்ற வரிசை கட்டும் வாடிக்கையாளர்கள் 4 நாட்களில் நிலைமை சரியாகும் மொபைல் நிறுவனம் விளக்கம்: சேவை முற்றிலும் முடங்கியதால் தவிப்பு
23-2-2018 1:17

சென்னை: மொபைல் சேவை 4 நாட்களில் முழுமையாக சீராகும் என தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பிறகு மொபைல் நிறுவனங்கள் இடையே கடும் கட்டணப்போட்டி உருவாகியுள்ளது. இதனால் அதிரடி தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. இருப்பினும் தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்வது ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பெரும் சவாலானதாக இருக்கிறது. கட்டணக் குறைப்பு, அளவில்லா அழைப்புகள், தினசரி ஒன்றரை ஜிபி வரை இணைய பயன்பாடு சலுகை என மிக குறைந்த கட்டணங்களில் அளிப்பதால் அவை பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளன. லாபம் கிடைக்காமல் தள்ளாடும் நிறுவனங்கள், இந்த சிக்கலில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன. மொபைல் எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாற்றும் வசதி வந்துவிட்டதால் வாடிக்கையாளர்கள் போர்ட் கோரிக்கை அனுப்பி மாறி விடுகின்றனர். இதற்கிடையில் ஏர்செல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு கடந்த 2 நாட்களாக டவர்கள் எதுவும் கிடைக்கவில்லை மொபைல் சேவை முற்றிலுமாக முடங்கியது. இதனால் கடும் அவதிக்கு ஆளாகினர். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள ஏர்செல் சேவை மையத்துக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஊழியர்களால் சமாதானப்படுத்த இயலவில்லை. இதனால் சில இடங்களில் கைகலப்பு நடந்தது. ஏர்செல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 8.9 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் ஒன்றரை கோடி பேர் இருக்கின்றனர். தமிழகத்தில் இந்த நிறுவனத்துக்கு டவர் நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம் நிறுவிய 10,000 டவர்களில் 9,000 டவர்கள் செயல் இழந்தன. இதுவே மிக முக்கிய காரணம் என கூறப்படுகிறது. டவர்கள் செயல் இழந்ததும் மொபைல் சேவை முடங்கியதால், நிறுவனம் மூடப்படும் என்ற வதந்தி பரவியது. இதனால் வேறு நிறுவனத்துக்கு மாறுவதற்கு வாடிக்கையாளர்கள் ‘போர்ட்’ கோரிக்கை அனுப்பினர். ஆனால், மிக குறைந்த அளவு அவுட்லெட்கள் கொண்ட இந்த நிறுவனத்தால் ஒரு லட்சத்துக்கும் கீழ் உள்ள போர்ட் கோரிக்கைகைளை மட்டுமே கையாள முடிவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த நிறுவன் ட்விட்டரிலும் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை வாடிக்கையாளர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு இந்த நிறுவனம் தரப்பில் கூறுகையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. 4 நாட்களில் இது முழுமையாக சரியாகும். போர்ட் கோரிக்கை அனுப்பியவர்களுக்கு விரைவில் அதற்கான எண் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

தேயிலைத்தூள் 2.35 கோடிக்கு விற்பனை
23-2-2018 1:17

கோவை: கோவை தேயிலை வர்த்தக மையத்தில் புதன்கிழமை மாலை தோறும் ஆன்லைன் ஏல முறையில் தேயிலைத்தூள் விற்பனை நடக்கிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை நடந்த ஏலத்தில் உள்ளூர் ரகம் (டஸ்ட்) 1.72 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. இதில் 1.48 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விற்பனை விலை கிலோ 109.53. விற்பனை மதிப்பு 1.63 கோடி.ஏற்றுமதி ரகம்(லீப்) 97 ஆயிரம் கிலோ விற்பனைக்கு வந்தது. இதில் 73 ஆயிரம் கிலோ விற்பனையானது. சராசரி விற்பனை விலை கிலோ 99.89. விற்பனை மதிப்பு 73 லட்சம். கடந்த வார விற்பனையோடு ஒப்பிடுகையில், உள்ளூர் ரகம் கிலோவுக்கு 63 பைசாவும், ஏற்றுமதி ரகம் 1.28ம் அதிகரித்துள்ளது. மொத்தத்தில் உள்ளூர் மற்றும் ஏற்றுமதி ரக தேயிலைத்தூள் 2.35 கோடிக்கு விற்றுள்ளது. இது கடந்த வாரத்தை விட 37 லட்சம் அதிகமாகும்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசு குறைப்பு
23-2-2018 1:17

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசு குறைந்து, 380 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் விலை நிர்ணய ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 395 காசில் இருந்து 15 காசு குறைக்கப்பட்டு, 380 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை குறைந்தது. குறிப்பாக ஐதராபாத் மண்டலத்தில் முட்டை விலை, நாமக்கல் மண்டலத்தை விட குறைவாக இருப்பதால், தற்போது முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் நேற்று நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை விலை விபரம் (காசுகளில்): ஐதராபாத் 355, விஜயவாடா 375, பர்வாலா 350, மும்பை 410, மைசூர் 398, பெங்களூர் 395, டில்லி 390, கொல்கத்தா 422 காசுகள்.

ADVERTISEMENTS
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி எதிரொலி : 72 மணிநேரத்தில் 18,000 வங்கி ஊழியர்கள் அதிரடி மாற்றம்
22-2-2018 17:4

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியின் 18,000 ஊழியர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதிரடியாக பணியில் இருந்து மாற்றப்படுவதால் பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் அமைதி குலைந்த நிலையில் உள்ளதாக தேசிய வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்து, வைர வியாபாரி நிரவ் மோடி மோசடி செய்ததாக அந்த வங்கி சிபிஐயிடம் புகார் தெரிவித்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், நிரவ் மோடியின் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த 11,400 கோடி ரூபாய் மோசடியில் பஞ்சாப் நோஷனல் வங்கியின் பொது மேலாளர் பொறுப்புக்கு இணையான அதிகாரி ராஜேஷ் ஜிந்தாலை சிபிஐ கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தது. இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 18,000 ஊழியர்கள் அதிடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 72 மணிநேரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் வங்கி ஊழியர்கள் அமைதி குலைந்த நிலையில் உள்ளதாக தேசிய வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நிரவ் மோடியின் 11,400 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தை தொடர்ந்து மத்திய புலனாய்வு ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் வங்கி நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தொழிலதிபர் நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 17 இடங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.